கொடுக்க வேண்டியவர் கொடுக்கவில்லை, முதல்வர் பழனிசாமிக்கு ஐடியா கொடுக்கும் டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணைகள் வேகமாக நிரம்புவதால், காவிரியில் கூடுதல் நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்த்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் விளைவாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில்  கர்நாடக அணைகள் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி. என இம்மாத இறுதி வரை மொத்தம் 86.38 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். இன்று வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 52.28 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியாக வேண்டும். ஆனால், கர்நாடக அணைகளில்  தண்ணீர் இல்லாததைக் காரணம் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. கடந்த மாதம் கர்நாடகத்தில் மழை பெய்ததால் ஓரளவு தண்ணீர் திறந்து விட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் இன்று வரை தமிழகத்திற்கு கர்நாடகம் வெறும் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கியிருக்கிறது. இன்று வரை தமிழகத்திற்கு கர்நாடகம் மொத்தம் 42.28 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டியிருக்கிறது.

தொடக்கத்தில் மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இப்போது தீவிரமடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு 18,417 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 22,719 கன அடி, ஹேமாவதி அணைக்கு 28,317 கன அடி, ஹாரங்கி அணைக்கு 8,926 கன அடி என காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள 4 அணைகளுக்கும் வினாடிக்கு 78,379 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்இருப்பு 51 டி.எம்.சியை தாண்டிவிட்டது. இது கர்நாடக அணைகளின் மொத்தக் கொள்ளளவில் பாதிக்கும் அதிகமாகும். இதே வேகத்தில் தண்ணீர் வந்தால் அணைகளின் நீர் இருப்பு ஒரு நாளைக்கு 6.5 டி.எம்.சி. வீதம் அதிகரிக்கும். தமிழகத்திற்கு 52 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியிருப்பதால், காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், வினாடிக்கு 13,511 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கர்நாடகப் பாசனப் பகுதிகளின் தேவைகளுக்குப் போக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5016 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 20.06 டி.எம்.சி. மட்டும் தான். இந்த நீரை வைத்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது குறித்து அரசால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்களில் 8-ஆவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாகவும்,  நீர் இருப்பு 50.50 டி.எம்.சி.யாகவும் உயர்ந்து, செப்டம்பர் மாதத்திலும் நீர்வரத்து நீடித்தால் மட்டும் தான்   சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்ய முடியும். கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீரில் பாதி அளவை காவிரியில் திறந்து விட்டால் அடுத்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும். இம்மாத இறுதிக்குள் நடுவர்மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதை விட கூடுதலாகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கக்கூடும். சம்பா நெல் சாகுபடியையும் வெற்றிகரமாக சாதிக்க முடியும்.

கர்நாடகம் - கேரளத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு காவிரியில்  வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தாராளமாக தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இதையெல்லாம் கண்காணித்து தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறக்கும்படி ஆணையிட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம்  உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும்.

எனவே, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss said Karnataka release more water in cauvery to tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->