ஒன்றிரண்டு அல்ல 22 கேள்விகள்.. ஸ்டாலினால் பதிலளிக்க முடியுமா...? - மரு. ராமதாஸ் நறுக்.! - Seithipunal
Seithipunal


ஈழத்தமிழர்களுக்கு துரோகம்: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் தற்போது 22  கேள்விகள் எழுப்பி இருக்கின்றார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: 

1. ஈழத்தமிழர்களின்  கோரிக்கை இரட்டைக் குடியுரிமை தான். ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட,  அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?

2. 2009-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம்  தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?

3. இலங்கையில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை இணைத்து தனித்தமிழீழம் அமைக்க வேண்டும்; அதில் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் எண்ணம். அதனால் தான் கனடா போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் பலர் இன்னும் குடியுரிமை பெறாமல் உள்ளனர். இதை உணராமல் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ(?!?!) என்று ஸ்டாலின் உளறுகிறார். அப்படியானால் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கக்கூடாது என்று ஸ்டாலின் துடிக்கிறாரா? 

4. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? திமுக ஆட்சியில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில்  நடத்தப்பட்டதையும், முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டதையும் ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

5. ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் முதன்முதலில்  1990-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் கலைஞர் ஆட்சியில் தானே தொடங்கப்பட்டது?

6. விடுதலைப்புலிகளை அடைத்து வைக்க இந்த முகாம் அமைக்கப்பட்டதாக அறிவித்த திமுக அரசு, அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அழைத்து வந்து வேலூர் முகாமில் அடைத்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது தேவாரம் தலைமையிலான தனிப்படையை அனுப்பி துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றது திமுக அரசு தானே?

7. அதுமட்டுமின்றி, 130 இளைஞர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததும் திமுக அரசு தானே. இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

8.  2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம்  தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம்களுக்குள் 150 காவலர்களை அனுப்பிய திமுக அரசு, அங்கு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது கலைஞரின் அரசு தானே?

9. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 பேர் மீது காவலரை கடத்தி சிறைவைத்ததாக பொய்வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்த கொடுமையை செய்தது திமுக அரசு தானே?

10. உலகிலேயே   அனைத்தையும் இழந்த அகதிகள் மீது துப்பாக்கிச் சூடும், கொலைவெறித் தாக்குதலில் நடத்திய பெருமை திமுக அரசுக்கு தான் உண்டு. இவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்களாம். இதை விட இரட்டை வேடம் உண்டா?

11. ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?

12. சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்த கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார்.  கலைஞரின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து வெளியில் வந்த அப்பாவி  ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொத்து குண்டுகளை வீசி கொன்றது. இவ்வாறாக சிங்களப் படைகளில் தமிழின ஒழிப்புக்கு திமுக துணை போனதை மறுக்க முடியுமா?

13. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘இலங்கையில்  தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?’’ எனக் கேட்ட போது, ‘‘மழை விட்டு விட்டது.... தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?

14. இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தனது உடலையே ஆயுதமாக்கி, ஈழப்போருக்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி போராட தமிழக இளைஞர்கள் ஆயத்தமான போது,  முத்துக்குமாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் திமுக அரசு தடுத்ததையும், இறுதி ஊர்வலத்தில் கூட தடியடி நடத்தியதையும் மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?

15. இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?

16. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே.... அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?

17. இலங்கை அரசால் பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் பக்கவாதம்  உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம்  தேதி இரவு சென்னைக்கு வந்த போது, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் விமானத்தை விட்டு, இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி, அவரது மறைவுக்கு வழிவகுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தானே? இதைவிட மாபாதகச் செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? 

18. சென்னையில்  2012 ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டையில்  நடைபெறவிருந்த தமிழீழ ஆதரவு மாநாட்டின் தலைப்பையே,  அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மிரட்டலுக்கு அஞ்சி  ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று மாற்றினார். அதுமட்டுமின்றி மாநாட்டில் தமிழீழம் என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை. இதை விட மோசமானதொரு கொத்தடிமைத்தனம் இருக்க முடியுமா? 

19. ஈழத்தமிழர் நலனுக்காக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், மத்திய அரசுக்கு அஞ்சி  தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதைவிட பெரிய துரோகத்தை ஈழத்தமிழருக்கு செய்ய முடியுமா?

20.  விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினாரே? ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?

21. 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப  முயற்சிகள் நடந்ததன. அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது நானும், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் தான். அதை திமுகவும், அதன் தலைமையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன.  இதை திமுக மறுக்க முடியுமா?

22. ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த  போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. இப்படியாக ஈழத்தமிழர் நலனில் ராஜபக்சேக்களாகவும்,  ஜெயவர்தனேவாகவும் இருந்த இப்போது பிரபாரகரன் வேடம் போட்டு மக்களை ஏமாற்றத் துடிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss 22 questions to stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->