என்எல்சி.,யை ஏன் இழுத்து மூட வேண்டும்? இவ்வளவு அநியாயம் நடக்கிறதா? பாமகவின் இன்றைய போராட்டத்திற்கு காரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், உள்ளூர் மக்களின் நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மண்ணின் பிரச்சினைகளையும், மக்களின் சிக்கல்களையும்  தீர்க்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினாலும் அதை செவி மடுக்க என்.எல்.சி மறுப்பது கண்டித்து இன்று பாமக சார்பில் போரட்டம் நடைபெறுகிடறது. 

பாமகவின் இந்த போராட்டத்திற்கு என்ன காரணம்? என்.எல்.சி., நிர்வாகம் செய்த தீங்கு என்ன? இதுகுறித்து அம்மாவட்ட மக்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்வைக்கும் காரண பட்டியல் பின்வருமாறு :

 

ஏமாற்று வேலை :

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் இருந்து 36,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 

இந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு ரூ.10,662 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக என்.எல்.சி வளர்ச்சியடைந்திருக்கிறது. 

ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, அந்நிறுவனம் தொடங்கியது முதலே முன் வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதையே கள நிலவமும் சொல்கிறது.

விவசாயம், சுற்றுசூழல் பாதிப்பு :

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது, நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. 

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை என்று, அம்மாவட்ட மக்களின் குமுறலாக உள்ளது.

மேலும், அந்நிறுவனம் நிலக்கரியை எடுப்பதற்கு முன், நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது. அந்த நீரையும் விவசாயத்துக்கு சரியாக வழங்குவதில்லை.

மழைக் காலங்களில் சுரங்களில் உள்ள வெள்ளநீரை வெளியில் தள்ளி விவசாய பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

மாவட்டமே பாதிக்கப்பட்ட பகுதிதான் :

என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

வேலைவாய்ப்பு :

என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு 1989ஆம் ஆண்டுவரை மொத்தமாக 1827 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நிலம் கொடுத்தோரு நிரந்தர வேலை அளிக்கும் கொள்கை கைவிடப்பட்டு, 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒப்பந்த வேலைகள் கூட அளிக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டுவிட்டது. 

தமிழர்களுக்கும் வேலை இல்லை :

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் எந்தவொரு வேலையும் உள்ளூர் மக்களுக்கும் கொடுக்கப்படுவது இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும் கொடுக்கப்படுவது இல்லை. அண்மையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு கேட் (GATE) தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

நடுத்தெருவில் நிலம் கொடுத்தவர்கள் :

என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்றுவரை பட்டா வழங்கப்படவில்லை. குடிநீர், சாலை வசதிகள் செய்துதரவில்லை. குறிப்பாக நெய்வேலி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை நிலம் கொடுத்தோருக்கான வாழ்விட வசதிகள் கிடைக்கவில்லை. 

448 கோடி ரூபாய் நிதி :

என்.எல்.சி இந்தியா சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மேம்பாட்டுக்காக சட்டப்படி அமைக்கப்பட்ட மாவட்ட கனிம அறக்கட்டளை (District Mineral Foundation - DMF) நிர்வாகக் குழுவில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கோ கிராமசபை பிரதிநிதிகளுக்கோ இடமளிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 448 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டும் கூட, அவை உண்மையாகவே நிலக்கரி சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடப்படவில்லை.

வாழ்வாதாரம் இழப்பு :

சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பதன் மூலமாக, ஏராளமான மக்கள் தமது நிலத்தையும், வாழ்வாதாரத்தையும், பல தலைமுறைகளாக வாழ்ந்த ஊரையும் பண்பாட்டு தொடர்புகளையும் இழப்பது அதைவிட பேரிழப்பாகும். 

காற்று மாசு :

நிலக்கரி சுரங்கம் மூலம், மிக மோசமான சல்பர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்கள் வெளியாகும்.  நிலக்கரி துகள் மிகக் கடுமையான காற்று மாசுபாட்டை உருவாக்கும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் நோய்களுக்கு இது காரணமாகும். 

பயன்படுத்தாத நிலம் திருப்பிக் கொடுக்காத நிலை :

சுரங்கம் தோண்டி மூடப்பட்ட பகுதிகளை நிறுவனமே வைத்துள்ளது. அவற்றை நிலம் கொடுத்த மக்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. 

காலநிலை மாற்றம் :

புவி வெப்பம் அதிகரிப்பதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு - பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, மாபெரும் வறட்சி, புதிய நோய்கள் எனப்பல கேடுகளை அதிகமாகி வருகின்றன. காலநிலை மாற்றத்தை உருவாக்கும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதற்கு முதல் காரணமாக இருக்கும் இந்த நிலக்கரி சுரங்கங்களும், நிலக்கரி அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும். இதை ஐக்கிய நாடுகளே எச்சரித்துள்ளது.

தனியார்மயம் என்.எல்.சி :

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்படவுள்ளது. 

இப்படி பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு, நெய்வேலி  சுரங்க விரிவாக்க பணிக்காக நில கையகம் செய்யும் பணிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தை அதன் தொடக்க நிலையிலேயே கைவிடக் கோரியும், இன்று பாமக சார்பாக போராட்டம் நடைபெறுகிறது. 

இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்று நடத்துகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk nlc protest sep 4


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->