வங்கி அதிகாரி நியமனத்தில் பறிக்கப்பட்ட இடங்கள்! வழக்கு மூலம் பெற்றுக்கொடுத்த பாமக! டாக்டர் ராமதாஸ் பெருமிதம்!  - Seithipunal
Seithipunal


வங்கி அதிகாரிகள் நியமனத்தில் சமூக அநீதி முறியடிப்பு செய்யப்பட்டது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த  ஆள்தேர்வு அறிவிக்கையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 116 இடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடங்கள் மீண்டும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது.

பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மராட்டியம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி யூகோ வங்கி ஆகிய நான்கு வங்கிகளுக்கு 1417 அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆள் தேர்வு அறிவிக்கையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியிட்டது. மொத்தம் உள்ள 1417 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 382, பட்டியல் இனத்தவருக்கு 212, பழங்குடியினருக்கு 107, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 141 என இட ஒதுக்கீடு பிரிவினருக்கு  842 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் வகுப்பு ஏழைகளுக்கு மட்டும் சரியான அளவில் இடங்களை ஒதுக்கிய வங்கிகள், மற்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 701 இடங்கள் ஒதுக்குவதற்கு பதிலாக 585  இடங்களை மட்டுமே ஒதுக்கின. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 116 இடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை ஆய்வு செய்து பார்த்தபோது முதல் மூன்று வங்கிகள் இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்திருப்பதும், யூகோ வங்கி மட்டும் இடஒதுக்கீடு வழங்குவதில் குளறுபடி செய்திருப்பதும் தெரிய வந்தது. யூகோ வங்கியில் நிரப்பப்படஉள்ள 350 அதிகாரிகள் பணி இடங்களில் 208 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவினருக்கும், 142 இடங்கள் பொதுப்போட்டி பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 208  இடங்களுக்கு பதிலாக 94 இடங்களை மட்டுமே ஒதுக்கிய யூகோ வங்கி நிர்வாகம், மீதமுள்ள 114 இடங்களை பொதுப்போட்டி பிரிவில் சேர்த்து அப்பிரிவுக்கு மொத்தம் 256 இடங்களை ஒதுக்கியது. அதாவது பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு மொத்தம் 49.50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 10 விழுக்காடு, பழங்குடியினருக்கு 3 விழுக்காடு என 17 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கியது.

இந்த சமூக அநீதியை கண்டித்து கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வங்கி அதிகாரிகள் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அநீதி இழைத்தது ஏன்? என்று யூகோ வங்கி, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியது. அதைத்தொடர்ந்து தமது தவறை உணர்ந்துகொண்ட யூகோ வங்கி இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து, வங்கி அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை இந்திய வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் மூலம் இப்போது வெளியிட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கை மூலம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 82 இடங்கள் உட்பட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மொத்தம் 114  இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரிடம் இருந்து பறிக்கப்பட்ட 32.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாட்டாளி மக்கள் கட்சி மீட்டு கொடுத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காக வழக்கு தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வினோபா பூபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 படம் : டாக்டர் ராமதாசுடன் வினோபா பூபதி

ஆனால் இதுகுறித்த உண்மைகள், அடிப்படை தரவுகள் ஆகிய எதையுமே அறிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் கடந்த 14-ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் வெளியான தவறான புரிதல் கொண்ட செய்திகளின் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன. பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் இடஒதுக்கீடு 32.5  விழுக்காடு பறிக்கப்பட்டிருந்த நிலையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டும் தான் பறிக்கப்பட்டிருந்ததாக நாளிதழில் வெளியான தவறான செய்தியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன. அந்த கட்சிகளின் சமூக நீதி குறித்த புரிதல் அவ்வளவுதான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக துல்லியமான புள்ளி விவரங்களுடன் போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான் ; சட்டப் போராட்டம் நடத்தி , பறிக்கப்பட்ட சமூக நீதியை மீட்டெடுத்து தரும் கட்சியும் பா.ம.க. தான்  என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளையும் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி பயணம் இன்றுபோல் என்றும் தொடரும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Get back UCO Bank officer seats to Reservation peoples


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->