டெல்லியில் டாக்டர் ராமதாஸ்! முக்கிய பிரச்சனைகளுக்காக பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு!  - Seithipunal
Seithipunal


பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார்கள்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு நீடித்தது என பாமக தலைமை நிலையத்தில் இருந்து வந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமை நிலைய செய்தியில், "இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்கள் நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள்.

29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிரதமரிடம் மனு ஒன்றை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார். பிரதமரிடம் மருத்துவர் அய்யா வழங்கிய மற்றொரு மனுவில் கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. 

மனுக்களை பெற்றுக் கொண்ட பிரதமர் அவர்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். பிரதமருடனான மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் சந்திப்பு  மிகவும்  சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

பிரதமரிடம் மருத்துவர் அய்யா அவர்கள் அளித்த மனுக்களின் விவரம் வருமாறு:

மனு எண் 1:  7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

பொருள்: 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோருதல் & தொடர்பாக

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட மனிதநேய கோரிக்கை மீது இந்தியப் பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கள் முன்வைக்கிறேன்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘‘நலமா மோடி?’’ நிகழ்ச்சியில் ‘‘எல்லோரும் சவுக்கியம்’’ என்று தமிழில் கூறி இந்தியர்களின் நலனை அமெரிக்க வாழ் மக்களிடம் தெரிவித்ததன் மூலமும்,  நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது அவைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாரின்,‘‘ யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்ற வரிகளைக் கூறி, உலக அளவிலான ஒற்றுமையை வலியுறுத்தியதன் மூலமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் தாங்கள் நீங்காத இடம் பிடித்திருக்கிறீர்கள்.

தொடர்ந்து செப்டம்பர் 30&ஆம் தேதி சென்னை விமான நிலையம், ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்ற சிங்கப்பூர் & இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஆகியவற்றில் உரையாற்றும் போது தமிழர் கலாச்சாரம், உணவு வழக்கங்கள், தமிழர் நாகரிகம் ஆகியவை குறித்து தாங்கள் குறிப்பிட்ட தகவல்கள் தமிழர்களுக்கும், தங்களுக்கும் இடையிலான உறவையும், உணர்வையும் நெருக்கமாக்கியிருக்கின்றன. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு இந்த நெருக்கம்  தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991&ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவரது வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்று இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக கே.டி.தாமஸ், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் குற்றம் செய்திருப்பார்கள் என்று தாம் நம்பவில்லை என்றும், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் ராஜிவின் துணைவியாரான சோனியா காந்திக்கு  தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி தமிழக ஆளுனர் மூலம் 7 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனடிப்படையில்,  7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது ஆளுனர் விரைந்து முடிவெடுப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது; காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டு நேற்றுடன் ஓராண்டும், ஒரு மாதமும் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுனர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த தாமதம் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.

7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்த தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜிவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி அவர்களும், புதல்வர் ராகுல் காந்தி அவர்களும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரள முன்னாள் சட்ட அமைச்சருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வலுவான காரணங்கள் உள்ளன; அவர்களின் விடுதலைக்கு எதிராக எந்த காரணமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை ஆளுனர் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, 7 தமிழர்களும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படக் கூடும்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பியாந்த்சிங் கடந்த 1995&ஆம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியும், பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவருமாகிய பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநில சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரின் தண்டனையையும் சீக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக் அவர்களின் 550&ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு குறைத்துள்ளது. இதே கருணையை 7 தமிழர்களிடமும் காட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கோரிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும்  வகையில், தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு  பிரதமராகிய தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனு எண் 2: காவிரி டெல்டா உழவர்கள் நலன் குறித்த கோரிக்கைகள்

பொருள்: கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோருதல்- தொடர்பாக

தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் உதவக் கூடிய முக்கியத் திட்டங்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற தங்களின் ஆதரவைக் கோரியும் இந்தக் கடிதத்தை இந்தியாவின் பிரதமராகிய தங்களுக்கு எழுதுகிறேன்.

1. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்

இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்பதையும்,  பாசனத் தேவைகளுக்காக பிற மாநிலங்களில் உருவாகி தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளையே நம்பியுள்ளது என்பதையும் தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 44 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 29 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக திகழ்வது காவிரி ஆறு தான். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய காவிரிப் பாசன மாவட்டங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி ஆற்றால் பாசன வசதி பெறுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. காவிரி ஆற்றை நம்பியிருக்கும் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காவிரி ஆறு மேற்கு திசை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தாலும் மேற்கில் சேலம், தெற்கில் மதுரை, இராமநாதபுரம், கிழக்கில் காவிரி பாசன மாவட்டங்கள் வடக்கில் சென்னை, வேலூர் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கும் நதியாக காவிரி திகழ்கிறது. காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்தில் குடிநீர் பெறுவோரின் எண்ணிக்கை மட்டும் 5 கோடி ஆகும். ஆனால், பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடகத்துடனான காவிரி சிக்கல் காரணமாகவும் காவிரியில் தண்ணீர் வருவது கணிக்க முடியாததாக உள்ளது. குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் வராததால்  காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடி செய்யப் படவில்லை. இதனால் காவிரி பாசன மாவட்டங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கடன் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் உழவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது.

கர்நாடகத்துடனான காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டாலும் கூட, இயற்கையின் திருவிளையாடலுக்கு தீர்வு காண முடியாது என்பதால், காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க வகை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கான சிறந்த, சாத்தியமான தீர்வு தான் கோதாவரி & காவிரி இணைப்பு ஆகும். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், அதில் ஒரு பகுதியை காவிரியில்  திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். காவிரியில் வரும் கோதாவரி நீரை குண்டாறு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களும் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கடந்த ஆட்சிக் காலத்தில் மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோதாவரி & காவிரி இணைப்பு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால்,  அத்தகைய அறிவிப்பு வெளியாகாதது தமிழக மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு பாரத பிரதமராகிய தாங்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில்,  ஏதெனும் ஒரு பயணத்தின் போது இது குறித்த அறிவிப்பை சிறப்பு அறிவிப்பாக வெளியிட வேண்டும்;  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2020&21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

2. ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும்

தமிழ்நாட்டிற்கும், காவிரி பாசன மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவிருப்பதாக தெரிகிறது. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பாசனப் பகுதிகளில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை  உணர்த்த நைஜீரியாவில் ஏற்பட்ட பேரழிவை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் காவிரிப் பாசன மாவட்டங்களைப் போலவே நைஜீரியாவின் நைஜர் நதிப் பாசனப் பகுதிகளும் வளம் கொழிக்கக்கூடியவை என்பதால் அங்கு ஏழைகளே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் கொள்ளையர்கள் பயமும் இல்லாததால் மக்கள் வெளியில் செல்லும்போது தங்களின் வீடுகளைப் பூட்டாமல் செல்லும் அளவுக்கு அங்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவியது.

ஆனால், நைஜர் டெல்டாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டு, எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்ட பிறகு உழவுத்தொழில் அழிந்தது. எண்ணெய் வளத்துடன், உழவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்பட்டதால், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கத் தொடங்கி  விட்டனர். இதனால், நைஜீரியாவில் அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.  தமிழகத்திலும் அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. அதை உறுதி செய்வதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வேண்டும்.

3. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி காவிரி படுகைக்கு வேறு சில அச்சுறுத்தல்களும் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 53 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் மிகப்பெரிய அளவில் சாயப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிமனம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அதன் இப்போதைய திறனை விட 10 மடங்கு அதிக அளவுக்கு விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 600 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய கடலோரப் பகுதிகளில் 10&க்கும் மேற்பட்ட  அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தால் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருக்காது; மாறாக எண்ணெய்க் கிணறுகள் நிறைந்த பாலைவனமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படாமல்  தடுக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலம் என்று மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அறிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றையும், அக்கறையையும் நான் அறிவேன். தமிழ் மொழி, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றைப் போலவே தமிழ் நிலத்தின் பயன்பாடும், தமிழ் உழவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும். ஆகவே, தமிழகத்தின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்தியப் பிரதமராகிய தங்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Chief dr ramadoss meet with India PM modi in Delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->