ஆகஸ்ட் 30 இல் பாமக ஆர்ப்பாட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் அன்புமணி! எங்கே? எதற்காக? - Seithipunal
Seithipunal


கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர மாநில அரசு கட்டும் அணைகளை கைவிட வலியுறுத்தி 30-ஆம் தேதி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் அருகில் உற்பத்தியாகும் கொசஸ்தலை ஆறு தமிழ்நாட்டில் பயணித்து எண்ணூர் அருகில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கத்திரிபள்ளியில் ரூ.92 கோடியில் 540 ஏக்கர் பரப்பளவிலும், மொக்கல கண்டிகை என்ற இடத்தில்  ரூ.72.20 கோடியில் 420 ஏக்கர் பரப்பளவிலும் இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து புதிய அணைகளை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள்  பெறப்படவிருக்கின்றன. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை இரு மாநில நல்லுறவை சீர்குலைத்துவிடும்.

கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் உருவானாலும் கூட, அது பயணிப்பது தமிழ்நாட்டில் தான். ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு கொசஸ்தலை ஆறு தான் பாசன ஆதாரமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி, தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றை நிரப்பும் கொசஸ்தலை அதன் பின் சென்னை எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது.

கொசஸ்தலை ஆற்றுப் படுகையின் மொத்தப்பரப்பு 3,727 சதுர கி.மீ ஆகும். இதில் 877 சதுர கி.மீ மட்டும் தான் ஆந்திரத்தில் உள்ளது. மீதமுள்ள 2,850 சதுர கி.மீ படுகை தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி,  கொசஸ்தலை ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு ஆகும். அத்தகைய ஆறுகளில் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் அணைகளை கட்ட முடியாது. இந்த விதிகள் ஆந்திர மாநில அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதை மதிக்காமல்  தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு அனுமதி அளிக்கிறது என்றால், தமிழகத்துடனான நல்லுறவை ஆந்திரா மதிக்கவில்லை என்பது தான் பொருள். ஆந்திரத்தின் இந்த அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு ஓர் அணை கட்டியுள்ளது. இப்போது மேலும் இரு அணைகள் கட்டப்பட்டால் கொசஸ்தலையாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வராது. அதனால் இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து விடும்.  ஒரு கோடிக்கும் கூடுதலான மக்களைக் கொண்ட சென்னை மாநகரத்திற்கும் குடிநீர் கிடைக்காது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

2017&ஆம் ஆண்டில் கொசஸ்தலை ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் 5 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டது. அதை எதிர்த்து அப்போது நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்; புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தினேன். அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன்காரணமாக அப்போது புதிய தடுப்பணைகள் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்த ஆந்திர அரசு, இப்போது இரு இடங்களில் அணை கட்டும் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளது.

Image : 2017 பாமக போராட்டம்

கொசஸ்தலையாற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்தும், அதற்கான பணிகளை கைவிட வலியுறுத்தியும் ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. கொசஸ்தலையாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக் அரசு மேற்கொள்ள வேண்டும்.

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக் கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் வரும் 30&ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கவுள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்பர். சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் மற்றும் உழவர்களின் நலன்களைக் காக்க நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் உழவர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அன்புமணி அழைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK announce protest against dam build by AP Govt in kosasthalai river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->