விஷம் போல் ஏறுதே., ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அளவற்ற பொருள்களால் நிறைந்து, வெளிநாட்டவரும் விரும்பத்தக்கதாய், அமைதி நிறைந்ததாய், விளைபொருள் மிகுதி உடையதாய் இருப்பதே சிறந்த நாடாகும் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இப்படிப்பட்ட சிறப்பினை ஒரு நாடு பெற வேண்டும் என்றால், அந்த நாட்டில் சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், பதுக்கல், கடத்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம். 

இல்லையெனில், அந்த நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை தாண்டவமாடுவதோடு, அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும் . தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

பண்டிகை காலம் என்பதாலும், தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக செப்டம்பர் மாதத்தில் ஒரு கிலோ பெங்களூர் தக்காளி 20 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், நாட்டுத் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், காரட் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம், விளைச்சல் வரத்து குறைவு என்று சொல்லப்பட்டாலும், பண்டிகை மற்றும் திருமண நாட்களை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், அவை கிடங்குகளில் பதுக்கப்படுவதாகவும், இதன்மூலம் ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடுதான் விலை உயர்விற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சியாக அன்றாடம் சமையலுக்குத் தேவையான எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாகஉயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உளுத்தம் பருப்பின் விலை கிலோவிற்கு 22 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் வகைகளின் உயர்வும் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதர மளிகைப் பொருட்களான பூண்டு, புளி, கடுகு விலையும் 10 ஆகியவற்றின் 20 ரூபாய் முதல் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. 

சில பகுதிகளில் இன்னும் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்போருக்கு இந்த விலைவாசி உயர்வு கூடுதல் சுமையை கொடுத்திருக்கிறது. 

பொருட்களை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் 3 மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் மாநிலஅரசின் கடமை. அப்போது தான் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்கள் சிறப்பாக வாழ முடியும். 

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் தனிக் கவனம் செலுத்தி, விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops say about all product price hike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->