அறந்தாங்கி பர்வீன்பானு கொலை - சீமான் கடும் கண்டனம்!
NTK Seeman Condemn to Aranthangi murder
அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது.
திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தங்கை பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மேலும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to Aranthangi murder