நாளை நடக்க உள்ள போராட்டம்.! நாம் தமிழர் கட்சி, பாஜக அடுத்தடுத்து ஆதரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நாளை(21.01.2022) நடைபெறும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில், நாளை முதல் நடைபெறவிருக்கும், கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை தமிழ்நாடு அரசு உடனடியாக நீக்கியும், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பனையேறிகளை உடனடியாக விடுவிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற சனவரி 21-ம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். 

கள் உற்பத்தியை கள்ளச்சாராயத்தோடு தொடர்புப்படுத்தி அவதூறு பரப்புவதோடு, கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும், எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் பதியப்படும் நிலையில் கள் உணவுப்பொருள் தானேயொழிய போதைப்பொருள் அல்ல; ஆதலால் கள்ளினைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதனை உணர்த்தும் விதத்தில் இப்போராட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே பனைப் பொருட்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளது. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலில் மிக நெருங்கிய உணவாக இருந்தது பனங்கள் தான். பல நேரங்களில் மக்களுக்கான மருந்தாகவும், திருவிழாக் காலங்களில் கேளிக்கை பானகமாகவும், பருவக் காலங்களில் தினசரி பயன்பாட்டிலும் இருந்துள்ளது.

இறக்கப்படும் பனங்கள்ளில் மதுத்தன்மையின் உள்ளடக்கம் 1% முதல் 6% வரை மாறுபடும். கூடுதலாக, கணிசமான அளவு நேரடி நுண்ணுயிர்கள், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் வடிவில் எஞ்சிய சர்க்கரை, சிறிய அளவு புரதங்கள், லிப்பிடுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டே பனங்கள் மற்றும் தென்னங்கள் ஆகியவை பனம்பால் மற்றும் தென்னம்பால் என்ற பெயரில் தமிழ்த்தேசிய மதுபானங்களாக அறிவிக்கப்படும் என்றும், இவற்றால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிலும், பனைப் பொருளாதாரத் திட்ட வரைவிலும் குறிப்பிடப்பட்டது.

தமிழ்நாட்டில் நிலவும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கின்ற கள் இறக்கி விற்கும் போராட்டத்தினை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். மேலும், பனை மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு அரசு, மிக மலிவான தரத்துடன் உருவாக்கப்படும் டாஸ்மாக் மதுவிற்கு மாற்றாகவும், டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை மீட்டெடுக்கும் வகையிலும் கள் சந்தையினைத் தடை நீக்கி மீட்டுருவாக்கம் செய்து, அதன் வழி பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, காலங்கடத்தாமல் கள் இறக்குவதற்கான தடையை நீக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாஜகவின் விவசாய அணி மணிலா தலைவர் ஜி கே நாகராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மதுவிற்பனை அமோகமாக நடந்துவருகிறது.அரசு மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்டிவருகிறது. பொங்கல் திருநாளில்  ரூ.520.13 கோடி வருமானத்தைப் பெற்று,  கடந்த ஆண்டை விட 24.67% அதிகம் விற்று சாதனை படைத்துள்ளது. மது விற்பனை தமிழக அரசிற்கு வருமானம் மட்டுமல்லாமல் நிரந்தர தொழிலாக மாறிவிட்டது.அதற்கு பின்னால்  பல மதுதயாரிப்பு தொழிற்சாலை அதிபர்கள் வலம் வருகிறார்கள்.

பிரபல நடிகைகள் கையில் மது கிண்ணத்தோடு மதுவிற்பனைக்கு விளம்பரம் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால் தாய்ப்பாலுக்கு இணையான கள் இறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே பல வகையிலும் தீங்கு விளைவிக்கும் கெடுதலான மதுவை விற்பனை செய்யும்போது நல்ல ஆரோக்கியமான உணவான கள்ளை இறக்கி விற்பதில், விவசாயிகள் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் என்று பாஜக கருதுகிறது.

எனவே இது தொடர்பாக கடந்த டிசம்பர் 6-ம் தேதி கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பாஜக விவசாய அணி சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.

எனவே பாஜகவின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினால் தமிழக விவசாயிகள் நலன்கருதி, பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை  அவர்களின் ஆலோசனையின்படி, நாளை(21.01.2022) தமிழகம் முழுவதும் கள் இயக்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு பாஜக முழுஆதரவை வழங்குகிறது.

மேலும் கள் இறக்குவதும்,பருகுவதும் இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்ற அடிப்படையில் தமிழ்நாடு கள் இயக்கம், கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் பாஜகவின் சார்பாக விவசாய அணி மாநில தலைவர் என்ற முறையில் நானும்,மற்ற நிர்வாகிகளும் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிப்போம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk and bjp support tamilnadu kal iyakkam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->