முதல்வர் பழனிசாமி திட்டங்களை துவக்கி வைப்பது ஏன் தெரியுமா? ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்!  - Seithipunal
Seithipunal


அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பகட்டான திட்டங்களை துவக்கி வைப்பதால் எந்த பயனுமில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' துவக்கி வைத்த நேரத்தில், சேலம் பசுமை வழி சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து முறையிடுவதற்கு வந்த விவசாயிகளை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் முதலமைச்சர், குறையைச் சொல்ல வந்த விவசாயிகளை சிறைப்பிடித்தது அராஜகத்தின் அடையாளமாகவே தெரிகிறது. புதிய தலைமைச் செயலாளர் புடைசூழ சேலத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதை தவிர, அதில் ஏதும் சிறப்போ, மக்கள் குறை தீர்க்கும் நல்ல நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ‘மனுநீதி நாள் முகாம்’ 1969-லேயே துவங்கப்பட்டு - மக்களின் குறைகள் அவ்வப்போது தீர்த்து வைக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது புதன்கிழமை மக்களைத் தேடி, கிராமங்களுக்கு சென்ற அதிகாரிகள் - இந்த மனுநீதி நாட்களை நடத்தி குறைகளுக்கு தீர்வு கண்டார்கள். ‘மக்களைத் தேடி அரசு நிர்வாகம்’ என்பதை முதலில் எடுத்துச் சென்ற ஆட்சி கழக ஆட்சி!

ஆனால், அ.தி.மு.க ஆட்சியிலோ ‘அரசு நிர்வாகம்’ தோல்வியடையும் போதெல்லாம், ஒரு புதிய திட்டத்தை விளம்பரப்படுத்தி - அதன் மூலம் தங்கள் தோல்வியை மறைப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் முதலில் ‘அம்மா திட்டம்’ ஒன்றை அறிவித்து - 63 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுவிட்டதாக மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தார்கள். அந்த 'அம்மா திட்டம்' இப்போது என்ன கதியானது என்று தெரியவில்லை. இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி தலைமையில் உள்ள ஆட்சியில் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து - ஊராட்சியிலிருந்து தலைமைச் செயலகம் வரை ஊழல் புரையோடி - நிர்வாக இயந்திரம் சரிசெய்ய முடியாத அளவிற்கு முழுவதும் துருப்பிடித்துக் கிடக்கின்ற நேரத்தில் திடீரென்று 'முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம்' ஒன்று, உருப்படியில்லாமல் விளம்பரத்திற்காக துவங்கப்பட்டுள்ளது. எப்படி ஊழலை மறைக்க மாவட்டங்களைப் பிரித்து 'புதிய மாவட்டங்கள்' என்று கூறுகிறாரோ, அதேபோல் தனது 'நிர்வாகத் தோல்வியை' மறைக்க, இப்போது புதிய 'சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி திரு பழனிசாமி.

மாவட்டங்களில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ‘மக்கள் குறை தீர்க்கும் நாள்’ நடைபெறுகிறது. ஆனால், முதியோர் உதவித்தொகை வழங்கவோ, பட்டா கோரியோ, பட்டா மாறுதலுக்கோ, நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கோ கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் அனைத்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படக் காட்சிகள் போலவே தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ‘குறை தீர்ப்பு முகாம்’, ‘மனுக்களை, குறைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வழியின்றி, இன்னொரு அதிகாரிக்கு அனுப்பும் முகாம்களாக’ அ.தி.மு.க ஆட்சியில் மாறிவிட்டது. நிர்வாக இயந்திரத்தை செம்மைப்படுத்த உறுதுணையாக இருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வரும் ஊழல் புகார்களுக்கு அனுமதி பெறுவது, இந்தத் துறைகளுக்கு குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.ஜி.யை அங்கேயே தொடர வைத்து, இரு எஸ்.பி.,க்கள் மற்றும் இரண்டு டி.எஸ்.பி.,க்களை அதிரடியாக மாற்றி அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கிலேயே இந்த குளறுபடியும் அராஜகமும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு நிர்வாக அலங்கோலங்களை சரிசெய்ய முடியாத முதலமைச்சர், இப்படி “புதிய மாவட்டங்கள்”, “புதிய முகாம்கள்” மூலம், மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப நினைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் தன்னால் முடிந்தால் - அரசு நிர்வாகத்தை சீர்செய்ய - அரசு அலுவலகங்களில் - அமைச்சர்கள் மட்டத்தில் உள்ள லஞ்ச லாவண்யங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பகட்டான திட்டங்களை, பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக துவக்கி எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin said tn govt failed in management


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->