உங்களுக்கு என்ன தகுதி இருக்கு! ஆளுநரை வறுத்தெடுத்த முக ஸ்டாலின்! உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


'தமிழக மக்கள் மீதான மிக மோசமான - தரக்குறைவான - விஷமத்தனமான விமர்சனத்தை புதுவை துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்' எனவும், 'புதுவை துணை நிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாமல் திரும்பப் பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும்' எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுவை துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள், தான் சட்டப்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளின் எல்லைகளைத் தாண்டி, கட்டுப்பாடற்ற முறையில், அவருக்குத் தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கருத்து கூறுகிறார். சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க முன் வந்து, “தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள். கோழைத்தனமானவர்கள்” என்று அநாகரிகமாக - அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பொறுப்புக்குக் கிஞ்சிற்றும் பொருந்தாத, அகங்காரமான ஒரு விமர்சனத்தை வைத்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் பணியில்,எத்தனையோ தமிழக வீரர்கள் தினமும் வீரமரணம் அடைகிறார்கள். இந்திய ராணுவத்தில் உள்ள தமிழக வீரர்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனும், வீர தீரம் நிறைந்த நெஞ்சுரத்துடனும் எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் இரவும் பகலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது மட்டுமின்றி, சீனப் போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் என்று நம் நாடு எதிர்கொண்ட அத்தனை போர்களிலும் முன்னின்று தாராளமாக நிதியுதவி செய்து நாட்டுப்பற்றைப் போற்றியவர்கள் தமிழக மக்கள். நாட்டில் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், ஓடோடிச் சென்று உதவி செய்யும் காக்கும் கரமும் கருணை உள்ளமும் படைத்தவர்கள் தமிழக மக்கள். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து விட்டார்களே என்ற ஒரே எரிச்சலில்- அன்பும்,அறநோக்கமும், வீரமும் நிறைந்த தமிழக மக்களைப் பார்த்து “கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள்” என்று புதுவை துணை ஆளுநர் கூறியிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி- ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாகவே தெரிகிறது.

புதுவை மாநில அரசு நிர்வாகத்தைத் திட்டமிட்டு முடக்கி - உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் குட்டு வாங்கி- அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், புதுவை துணை நிலை ஆளுநராகத் தொடரும் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள், தமிழக அரசைப் பற்றிப் பேசவோ, தமிழக மக்களைப் பற்றிக் கருத்துக் கூறவோ எவ்வித தார்மீகத் தகுதியும்,உரிமையும் இல்லாதவர். தன் அதிகாரத்தைப் பற்றியே உச்சநீதிமன்றம் வரை கேள்வி எழுப்பப்பட்ட பிறகும், நடுநிலையாளர்களே நகைத்திடும் வகையில், பதவியில் தொடரும் துணை நிலை ஆளுநர், அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள மக்களைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுவதை தமிழக மக்கள் ஒருக்காலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். குஜராத், உத்தரப் பிரதேசம், பீஹார் மாநில மக்களை இப்படி கொச்சைப் படுத்திப் பேசி விட்டு, கிரண் பேடி அவர்கள் பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்க முடியுமா? தமிழக மக்கள் என்ன கிள்ளுக்கீரைகளாக, கேவலமான பொருள்களாக, கவர்னரின் காமாலைக் கண்களுக்குத் தெரிகிறார்களா?

ஆகவே தமிழக மக்கள் மீதான மிக மோசமான - தரக்குறைவான - விஷமத்தனமான விமர்சனத்தை புதுவை துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். அப்போதுதான் அவர் வகிக்கும் உயர்பதவியின் மாண்பு காப்பாற்றப்படும். தமிழக மக்கள் மீது கண்ணியக்குறைவான விமர்சனம் செய்த புதுவை துணை நிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாமல் திரும்பப் பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin condemns kiran bedi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->