பழசு எதையுமே வைகோ மறக்கவில்லையா! திமுகவினை கடுமையாக விமர்சித்த செய்தியை பார்த்து கடுப்பான திமுகவினர்! - Seithipunal
Seithipunal


தற்போது திமுக, மதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது. இதற்கிடையே தற்போது, டிஜிட்டல் உலகத்திற்கே அரசியல் மாறியதையடுத்து, மதிமுகவின் வரலாறும் அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பின்வரும் செய்திகள் உள்ளதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். 

1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து, உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன், கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில், காங்கிரசை வீழ்த்தி, 1967 ஆம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால், புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக, 1969 பிப்ரவரி 3 ஆம் நாள், இயற்கை எய்தினார்.

அவருக்குப் பின்னர், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார்.

கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்.

கலைஞர் கருணாநிதியின் ஊழல்களை, மக்கள் மன்றத்தில் எம்.ஜி.ஆர். தோல் உரித்துக் காட்டினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்.

ஆட்சி பறிபோனதால், கொஞ்சம்கொஞ்சமாக, தி.மு.கழகத்தைத் தனது குடும்பச் சொத்தாக ஆக்கினார் கருணாநிதி. தமது மகனைக் கட்சியில் வாரிசாக முன்னிறுத்தினார். அப்போது, தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, தனித்து நின்று, தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததால், இயல்பாகவே தி.மு.கழகத் தொண்டர்கள் அவரிடம் பாசம் காட்டினார்கள். வைகோவுக்கு, கட்சியில் எழுந்த ஆதரவைக் கண்டு திடுக்கிட்ட கருணாநிதி, அவரை எவ்விதத்திலேனும் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டார்.

1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார் , அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார் .இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற்குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர் . அங்கு நிலவிய நிலைமையை உணர்ந்து கொண்டு வைகோவை அன்று கட்சியிலிருந்து நீக்குவதை கருணாநிதி ஒத்தி வைத்தார் .திமுகவின் செயற்குழுவில் தான் நினைத்ததை சாதிக்காதது கருணாநிதிக்கு அதுவே முதல்முறை .

1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்’ என்று ஒரு கொலைப்பழியைச் சுமத்தினார் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் சுயநல, குடும்ப அரசியலைக் கண்டித்தும், வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை. ஆயினும், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி.

தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி" 

என்று மதிமுகவின் வரலாறு தொடர்கிறது. கூட்டணி வைத்த பிறகும் திமுக முன்னாள் தலைவர் மீதான விமர்சனத்தை நீக்கவில்லையே என திமுகவினர் கொந்தளித்தது வருகின்றனர். 

Source : MDMK official Website 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk history damaged dmk name in their website


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->