டாக்டர் ராமதாசுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்கப்பட்ட பிறகும், அந்த பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு தொடரும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கை மூலம் அண்ணா பல்கலைக்கழக இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்களை இடம் பிடிக்க வைக்கும் நோக்கத்துடன், 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ் தகுதி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. உயர்புகழ் தகுதி பெற தேர்வு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். உயர்புகழ் தகுதி பெறுவதற்காக கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த ரூ.2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதில் ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும், மீதமுள்ள ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு நிபந்தனை விதித்தது. ரூ.1,750 கோடியை வழங்குவதற்கு தமிழக அரசு தயங்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி கிடைப்பதை விரும்பாத சில சக்திகள், அத்தகைய தகுதி அண்ணா பல்கலை.க்கு வழங்கப்பட்டால் 69% இடஒதுக்கீடு ரத்தாகும் என்று சர்ச்சை எழுப்பின.

தமிழக அரசுக்கும் இந்த விஷயத்தில் ஐயம் எழுந்ததால், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில் தான் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்கப்பட்டாலும், தமிழக அரசின் கொள்கைப்படி 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் 49.50% இட ஒதுக்கீடு திணிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இடஒதுக்கீடு பறிபோய்விடும் என்று அச்சுறுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறப்படுவதை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இது தமிழக உயர்கல்வித்துறைக்கு மிகவும் நிம்மதியளிக்கும் ஒன்றாகும்.

அடுத்தக்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள உயர்கல்வி தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அண்ணா பல்கலை.க்கு உயர்கல்வி தகுதி வழங்குவதாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,750 கோடி வழங்குவதற்கான உத்தரவாதத்தை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் 15&ஆம் தேதிக்குள் தமிழக அரசு அதன் முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு மாதங்களாகியும் அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை. இது அண்ணா பல்கலை. உயர்புகழ் தகுதி பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

உயர்புகழ் தகுதி பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அரசு பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட 8 மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு அத்தகுதி அதிகாரப்ப்பூர்வமாக வழங்கப் பட்டது. மேற்குவங்க மாநில பல்கலைக்கழகமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்க ரூ.2,000 கோடி வழங்க முடியாது என்று அம்மாநில அரசு அறிவித்து விட்டதால், அப்பல்கலைக்கு வழங்கப்படவிருந்த உயர்புகழ் தகுதி மராட்டியத்தில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் உயர்புகழ் தகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இரு தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் அத்தகுதி வழங்கப்பட்டு விட்டது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ் தகுதி வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகம் குறித்து மட்டும் தான் முடிவெடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,750 கோடி நிதி வழங்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உயர்புகழ் தகுதி எந்த நேரமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படக்கூடும்.

உயர்புகழ் தகுதி என்பதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு உலகின் 100 முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றாக முன்னேறுவதும் கிடைப்பதற்கரிய வரம் ஆகும். நிதி முதலீடு செய்வதற்கு அஞ்சி அந்த வாய்ப்பை தமிழ்நாடு இழந்து விடக்கூடாது. உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.4584 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.100 கோடி அண்ணா பல்கலை.யின் உட்கட்டமைப்பை மேம்படுத்த செலவிடப்படவுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். எனவே, உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டில் 4 முதல் 5 விழுக்காட்டை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கினாலே, அதற்கு உயர்புகழ் தகுதியை பெற்றுவிட முடியும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

happy announcement for ramadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->