அன்புமணியின் வேண்டுகோளுக்கு கிடைத்த அமோக வரவேற்பு! வெளியான தகவல்!  - Seithipunal
Seithipunal


பசுமைத் தாயகம் சார்பில் 200 கிராமங்களில் கிராமசபை கூட்டத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், "கிராமசபை கூட்டங்களில் காலநிலை அவசரநிலை (Climate Emergency) பிரகடனங்களை வெளியிட வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று தமிழ்நாட்டின் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் அக்டோபர் 2 அண்ணல் காந்தி பிறந்தநாள் கிராமசபை கூட்டத்தின் போது காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது; தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"புவிவெப்படைவதால் ஏற்படும் ஆபத்துகள் தமிழ்நாட்டை மோசமாக பாதிக்கும். குறிப்பாக கிராமப்பகுதிகள் பாதிப்படையும். இந்த பேராபத்திலிருந்து ஒவ்வொரு கிராமமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அந்த நோக்கில் கிராமங்களில் காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தவும், அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி செயலாக்கவும் வேண்டும்.

"தமிழக கிராமங்களில் கிராம மக்களிடையே புவிவெப்பமடைதல் மற்றும் காலநிலை அவசரநிலை பிரகடனம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) வெளியிட வேண்டும். அதன் பின்னர், கிராமத்துக்கான காலநிலை செயல்திட்டத்தை (Climate Action Plan) உருவாக்க வேண்டும்" என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP வெளியிட்ட அறிவிப்பில் வலியுறுத்தினார்.

கிராமங்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு : 

 பசுமைத் தாயகம் சார்பில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில், அக்டோபர் 2 பஞ்சாயத்து காலநிலை நடவடிக்கை பிரச்சாரத்தின் போது கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் அளித்தார்கள்:

 "காலநிலை மாற்றம் குறித்து 23.09.2019 அன்று நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவை சிறப்பு மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "காலநில மாற்றத்தை வெல்ல அனைவரும் இணைந்து தீவிரமாக செயல்படுவோம். இதற்காக உலகளாவிய மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும்" என கோரினார்.  

 புவிவெப்பம் அதிகரிப்பதால் பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் (Global Warming) காரணமாகும். புவிவெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளது. வரும் ஆண்டுகளில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

ஐநா காலநிலை அறிவியலாளர்கள் அமைப்பின் சிறப்பு அறிக்கையில் (IPCC Special report on Global Warming 2018), புவிவெப்பமடைவதை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்காக மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சிகள் ஆகியவை - பொது அமைப்புகள், சமூகங்கள், நிறுவனங்கள் என எல்லோருடனும் இணைந்து பெருமுயற்சி எடுத்து உடனடியாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, கிராம சபையில் பஞ்சாயத்து காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Panchayat Climate Emergency Declaration) உடனடியாக வெளியிட வலியுறுத்துகிறோம். அதன் தொடர்ச்சியாக, காலநிலை அவசரநிலையை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை (Panchayat Climate Action Plan) உருவாக்கி அதனை போர்க்கால அடிப்படையில் முழுவேகத்தில் செயல்படுத்த வேண்டும் என கோருகிறோம்" - என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பின்பற்றி பல கிராமங்களில் கிராமசபையில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்கவும் எதிர்கொள்ளவும் ஐநா அவை ஒரு உலக உச்சி மாநாட்டை செப்டம்பர் 23 அன்று நடத்தியது. இந்த சிக்கலை போர்க்கால வேகத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உலகெங்கும் சுமார் 60 லட்சம் பேர் போராட்டம் நடத்தினர்.

புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க, உலகின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அடுத்த 11 ஆண்டுகளுக்குள், அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் உலகினை தலைக்கீழாக மாற்ற வேண்டும் என ஐநா அறிவியலாளர்கள் IPCC குழு அறிவித்துள்ளது. அதற்கான மிகவேகமான நடவடிக்கைகளை 2020 ஆம் ஆண்டில், முழுவேகத்தில் தொடங்கினால் மட்டுமே உலகின் அழிவை தடுக்க முடியும் என எச்சரித்துள்ளது. அதாவது, இப்போதே தொடங்கி, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மாற்றினால் மட்டுமே - உலகம் அழிவதை தடுக்க முடியும்! இது அறிவியல் பூர்வமான உண்மை ஆகும்.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய அவசர காலம் இதுவாகும். எனவே, மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு கோருகிறது.

இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடத்தை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றியுள்ளன. லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி  உள்ளிட்ட பெருநகரங்களும், 18 நாடுகளை சேர்ந்த 1000 நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்த பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளன. உலகெங்கும் உள்ள 7000 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் காலநிலை மாற்ற அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளன.

இத்தகைய சூழலில் புவி வெப்பமடைதலால் ஏற்படும் பேராபத்தை தடுக்கும் வகையில் காலநிலை அவசரநிலையை (Climate Emergency Declaration) அறிவிக்க வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பிரச்சாரம் நடத்தப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் நாள் இப்பிரச்சாரத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சென்னையில் தொடங்கிவைத்தார்கள். தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் உள்ளாட்சிகளிலும் காலநிலை அவசரநிலை பிரகடனம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

செப்டம்பர் 23 முதல் 29 வரை சென்னை பெருநகரின் 23 இடங்களில் பசுமை தாயகம் சார்பில் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் அக்டோபர் 2 அண்ணல் காந்தி பிறந்தநாள் கிராமசபை கூட்டத்தின் போது காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது; தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என பசுமைத்தாயகம் அமைப்பு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Green Motherland awareness program for climate emergency over 200 villages


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->