ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் VB G RAM G Scheme: தமிழ்நாட்டிற்கு ₹7,957.57 கோடி நிதி ஒதுக்கீடு..!
Financial allocation for Tamil Nadu under the VB G RAM G Scheme effective from July 1st
'விபி ஜி ராம் ஜி' எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு இன்று (09.06.2026) தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானியும் பங்கேற்றார்.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் அமைச்சர் சிவராஜ் சிங் உரையாற்றினார். இதன் போது 2026 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம், எந்தவித இடையூறும் இன்றி, தொழிலாளர்களை மையமாகக் கொண்ட முழுமையான சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது பழைய திட்டத்தை மாற்றுவது மட்டுமல்ல எனவும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய ஒரு விஷயம் என்றும் கூறியுள்ளார்.

இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏற்கெனவே ₹30,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்றும் அமைச்சர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இன்று ₹95,692 கோடி இடைக்கால ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் மொத்த ஒதுக்கீடு ₹1.25 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தத் தொகையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளைச் சென்றடையும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சியும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியைப் பெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புறச் சொத்துக்களின் உருவாக்கம் ஆகிய இரண்டும் உறுதிசெய்யப்படும் வகையில், சட்டத்தின் விதிகளின் கீழ், வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு, நிதி வழங்குவதோடு மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதையும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதையும், தடையற்ற முறையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதையும் உறுதிசெய்ய விரும்புவதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் நாளான 2026 ஜூலை 01 முதலே பணிகளை விரைவாகத் தொடங்கும் வகையில், போதுமான எண்ணிக்கையிலான பணிகளுக்கு மாநிலங்கள் முன் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த திட்டத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு 26 மாநிலங்கள் ஏற்கெனவே அவற்றின் பங்கிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதே சமயம் ஜார்க்கண்ட், கர்நாடகா, தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டு செயல்முறையை விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தாம் கடிதம் எழுதவிருப்பதாகவும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மேலும் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் போது, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பல்வேறு மாநிலங்களுக்கான இடைக்கால ஒதுக்கீடுகளை அறிவித்தார். அதனபடி, தமிழ்நாட்டிற்கு ₹7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோன்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான இந்த ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக, மத்திய நிர்வாக, சமூக தணிக்கைக்காக ₹1,850.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் மொத்த இடைக்கால ஒதுக்கீடு ₹95,692.31 கோடியாகிறது என்றும் கூறியுள்ளார்.
இது பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும், இதைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்து, புதுதில்லியில் உள்ள பூசா நிறுவனத்தில் ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் தேசிய ஊரக வளர்ச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் இதில் பங்கேற்குமாறும் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், இந்தத் திட்டம் முன்னெடுப்பானது கிராமப்புற இந்தியாவைச் சிறப்பாக மாற்றி அமைக்கும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
Financial allocation for Tamil Nadu under the VB G RAM G Scheme effective from July 1st