அதிமுகவிலும் குடும்ப அரசியல்.. இபிஎஸ் மகன், மாப்பிள்ளைதான் எல்லாம்..செங்கோட்டையன் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிலும் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் வேரூன்றியுள்ளது என்று நேரடியாக தாக்கி பேசினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,“எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஒரே நிலைப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று எடப்பாடி பழனிசாமியின் அரசியலிலும் மகன், மாப்பிள்ளை, மைத்துனர் போன்றோரின் தலையீடு இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை,”என்று அதிரடியாக கூறினார்.

அவரது பேச்சில் மேலும்,“அதிமுக வலிமை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நான் எப்போதும் செயல்படுகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும், பிறரையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் எனது தத்துவம்,”என்று குறிப்பிட்டார்.

திமுகவில் குடும்ப ஆட்சி நிலவுகிறது என்று அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம் சாட்டி வரும் நிலையில், அதே குற்றச்சாட்டை தற்போது எடப்பாடி மீதும் செங்கோட்டையன் முன்வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த நிர்வாகியாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சியில் முக்கியப் பங்காற்றியவருமான செங்கோட்டையன், கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர்,“அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்; இல்லையெனில் 10 நாட்களில் தீர்மானம் எடுப்பேன்,”
என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கருத்து வெளியிட்ட சில நாட்களிலேயே அவரை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடியின் முடிவு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில், செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் ஒரே காரில் சென்றதும், பின்னர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்து பேசியதும் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,“செங்கோட்டையன் கட்சியின் கொள்கை, குறிக்கோள், ஒழுங்குமுறைகளை மீறி நடந்துள்ளார்,”என்று கூறி அவரை அதிமுகவில் இருந்து நீக்கியதாக அறிவித்தார்.

அத்துடன்,“கட்சியில் உள்ளவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது,” என்றும் எடப்பாடி தனது அறிக்கையில் எச்சரித்திருந்தார்.

இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து செங்கோட்டையன்,“என்னை நீக்குவதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். இது கட்சியின் ஒழுங்குக்கு எதிரானது,”என்று கடுமையாக எதிர்வினை தெரிவித்தார். மேலும், இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும், தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அதிமுகவில் நீண்டநாள் அமைதியாக இருந்த உள் குழப்பம் தற்போது மீண்டும் வெளிப்படையாகி, எடப்பாடி தலைமையின் நிலைப்பாட்டுக்கு புதிய சவால் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family politics in AIADMK too EPS son groom is everything Sengottaiyan accusation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->