விடியா அரசே., 13ம் தேதி சென்னையில் நடந்த சம்பவம்., எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக அம்மாவின் அரசு தனிக் கவனம் செலுத்தி, மிகப் பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் மற்றும் ஆற்றுப் பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. 

இதனால் நெரிசலற்ற பொதுப் போக்குவரத்து தமிழகம் முழுவதும் சாத்தியமாயிற்று. மாண்புமிகு அம்மாவின் அரசு, குறிப்பாக 2017 -க்கு பின்பு, சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே மிகப் பெரிய உயர்மட்டப் பாலம் 100 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டு, 95 சதவீத பணிகள் 2020 டிசம்பர் மாதத்தில் முடிவுற்றிருந்தன. 

தற்போது பாலப் பணிகள் 99.99 சதவீதம் முடிவுற்ற நிலையில், பாலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாத காரணத்தால், தினந்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர். குறிப்பாக, நேற்றைக்கு முன்தினம் (13.10.2021) நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்ட நிலையில், மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. 

மேலும், இது போன்ற தொடர் விடுமுறை பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காசு பேருந்துகளை உடனுக்குடன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு இயக்குவதை கண்காணிக்க, அப்போதைய அம்மா அரசின் அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நேரில் கோயம்பேட்டிற்கு வருகை தந்து கண்காணித்தனர். தற்போது இந்த அரசு அவ்வாறு செயல்படவில்லை.

அம்மாவின் அரசில், தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளன என்பதை இந்த விடியா அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். பாலங்கள் கட்டுவதே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகத் தான். 

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு உடனுக்குடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். 

அதே போல், குறிப்பாக சென்னையில் அம்மாவின் அரசால் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்த வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வேளச்சேரி இரண்டடுக்கு பாலத்தின் முடிந்த பகுதியையும்; 146 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலம் வேளச்சேரி - தாம்பரம் பாலப் பகுதியையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். 

மேலும், பாலப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகத் திறக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்." என்று எடப்பாடி K. பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex cm eps say about koyambedu over bridge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->