அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்கான ஒரே மந்திரம்! டாக்டர் ராமதாசின் இறுதி வியூகம்! - Seithipunal
Seithipunal


4 நாட்கள் கவனமாக உழைத்தால், 40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி, பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் இராமதாசு மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த மடலில் அவர் கூறியுள்ளதாவது, 

"ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வரும் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதை பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் மட்டுமின்றி, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல்களைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலும் மிகவும் முக்கியமானதாகும். இந்தத்  இரு தேர்தல்களுக்குமான பரப்புரை நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

ஓர் ஓவியத்தை வரையும் போது முதலில் மற்ற பகுதிகளையெல்லாம் வரைந்து விட்டு, இறுதியாக அந்த ஓவியத்தின் கண்களை வரைவார்கள். கண்களை வரைவது சிறிய பணி தான் என்றாலும், அது தான் ஓவியத்தை முழுமையாக்கும்; ஓவியத்திற்கு உயிரைக் கொடுக்கும். அதேபோல் தான் தேர்தல் பரப்புரையும். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடும், வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பாட்டாளிகளும், கூட்டணி கட்சியினரும் மேற்கொண்டு வரும் களப்பணிகள் மிகவும் சிறப்பானவை என்றாலும் கூட, ஓவியத்திற்கு கண்களை வரைவதைப் போன்று, அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் முக்கியமானவை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா,  தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் ஆற்றி வரும் களப்பணிகள் மிகவும் அற்புதமானவை. எந்தத் தொகுதியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்ற வினாவையே எழுப்பாமல் அனைத்து இடங்களிலும் தங்கள் சொந்தக் கட்சியின் வேட்பாளரே போட்டியிடுவதைப் போன்று அனைத்துக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும்.

குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள், மாவட்ட முன்னாள் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகம் உள்ளிட்ட அனைத்து நிலையிலான இந்நாள், முன்னாள் பொறுப்பாளர்களும் அனைத்துக் கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து உற்சாகமாக  களப்பணியை நடத்தி வருகின்றனர். அதேபோல், மற்ற கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், பிற கூட்டணி கட்சிகளும் ஆற்றும் பணிகள் வியக்க வைக்கின்றன.

மார்ச் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நான் இதுவரை மொத்தம் 22 மக்களவைத் தொகுதிகளிலும், 12 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டுள்ளேன். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதை நானே நேரில் பார்த்து அறிந்தேன். களநிலவரம் தொடர்பாக மற்ற தொகுதிகலில் இருந்து வரும் தகவல்களும் மிகவும் உற்சாகம் அளிப்பவையாகவே உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாம் விரைவாக முன்னேறுகிறோம்.

ஆனாலும், அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறிவிடக்கூடாது. பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் உட்பட அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிவாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது சந்தித்து அந்தந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுகவும், பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மக்களுக்காக செய்திருக்கும் நன்மைகள், தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி வேண்ட வேண்டும்.

அதேநேரத்தில் இப்போதே தலைவிரித்தாடும் திமுக கூட்டணி கட்சியினரின் வன்முறைகள், அவர்கள் அணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழல், வணிகர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம், அப்பாவி மக்களின் நிலங்கள் உள்ளிட்ட உடமைகள் பறிக்கப்படும் ஆபத்து ஆகியவற்றை மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.

தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன. மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர். அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss writes letter pmk members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->