எனக்கு தளபதி... எல்லோருக்கும் அண்ணாச்சி! மருத்துவர் இராமதாஸ் பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"எனக்கு தளபதி.... எல்லோருக்கும் அண்ணாச்சி!

பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்பவர்கள் தான். கட்சியின் வளர்ச்சிக்காக அவர்கள் கொடுத்த உழைப்பு, அர்ப்பணிப்பு, செய்த தியாகம் போன்றவற்றை பட்டியலிட்டால் பல லட்சம் தொகுதி புத்தகங்களை எழுதலாம். அந்த அளவுக்கு என்னில் தொடங்கி கடைக்கோடித் தொண்டன் வரை எல்லோருக்கும் தனித்தனி வரலாறு உண்டு. இத்தகைய வரலாறு தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது; எந்தக் கட்சித் தொண்டர்களுக்கும் கிடையாது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களில் ஒருவர் தான் இசக்கி படையாட்சி. கட்சியின் இணைப் பொதுச்செயலாளர். ஈடு இணையற்ற கடுமையான உழைப்பாளி. அவரிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை செய்து முடித்து விட்டு தான் ஓய்வார். அவருடன் நேற்று நான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, அவரது வயது என்ன? என்று கேட்டேன். 75 வயதாகி விட்டதாக இசக்கி படையாட்சி கூறினார். அதைக் கேட்டதும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

இசக்கிப் படையாட்சிக்கு இப்போது வயது 75 என்றால், அதில் 45 ஆண்டுகளாக என்னுடன் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரும் நானும் அறிமுகமாகும் போது வன்னியர் சங்கமும் தொடங்கப்படவில்லை; பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்படவில்லை. 1977-ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ட்ரிப்பிள் எஸ் (SSS) என்றழைக்கப்படும் சமூக சேவை சங்கக் கூட்டத்தில் சந்தித்தேன். அப்போது அவர் ஒரு ஏழை மில் தொழிலாளி. அதன்பின் வன்னியர் சங்கம்,  பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றில் எந்த எதிர்பார்ப்புமின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்தவர். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் என்னுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியவர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் தங்கி  கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பவர். தமிழ்நாட்டில் எனக்கு அடுத்தபடியாக  அவர் போகாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஏராளமான கிராமங்களுக்கு சென்று கட்சிப் பணியாற்றுபவர். கட்சிப் பணிகளை நிறைவேற்றித் தருவதில் எனக்குத் தளபதிகளாக விளங்கும் சிலரில் இசக்கிப் படையாட்சி முக்கியமானவர். ஆம்... அவர் எனது தளபதி.

என்னை அய்யா என்று அழைக்கும் அவர், மற்றவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி அழைப்பது அண்ணாச்சி என்று தான். அதேபோல், கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினராக இருந்தாலும், கட்சித் தலைவராக இருந்தாலும் அனைவருக்கும் அவர் அண்ணாச்சி தான். கடந்த 45 ஆண்டுகளில் அவர் யாரையும் கடிந்து கொண்டு நான் பார்த்ததில்லை; ஆனால், யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து வேலை வாங்கி விடுவார். எந்தப் பணியையும் அவரிடம் நம்பி ஒப்படைக்கலாம்; அது சிறப்பாக அமையும்.

இப்படிப்பட்ட அந்த உழைப்பாளிக்கு அதிகார பதவிகள் எதையும் நாம் கொடுக்கவில்லை; இணைப் பொதுச்செயலாளர் என்ற கட்சிப் பதவியைத் தான் அவருக்கு கொடுத்திருக்கிறோம். அதுவும் கூட பதவி இல்லை.... பொறுப்பு. அந்த பொறுப்பை மிகச்சிறப்பாக அவர் நிறைவேற்றி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் இசக்கி படையாட்சி. இவரைப் போன்ற செயல்வீரர்களால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வளர்கிறது." என்று மருத்துவர் இராமதாஸ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say about isakki padayachi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->