அன்புமணிக்கு எதிரான திமுகவின் திட்டம் டமார்! மன்னிப்பு கேட்குமா திமுக? டாக்டர் ராமதாஸ் கேள்வி!    - Seithipunal
Seithipunal


தருமபுரி மறுவாக்குப்பதிவு நியாயமல்ல, மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்குமா? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை பதிவான அதே அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்களித்த மக்களுக்கும், தீவிரமாக களப்பணியாற்றிய அதிமுக, பாமக மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் எந்த காரணத்திற்காக மறுவாக்குப்பதிவு கோரப்பட்டது?, அந்தக் காரணத்திற்கு மறுதேர்தலில் பதிவான வாக்குகள் நியாயம் சேர்த்துள்ளனவா? என்று வினாக்களை எழுப்பினால், இல்லை என்பது தான் பதிலாகும். தருமபுரி தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி, அதிக வாக்குகளை பதிவு செய்தனர் என்ற ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டைக் கூறித் தான், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்தது. திமுகவுக்கு ஆதரவாக தி இந்து ஆங்கில நாளிதழும், அதன் தருமபுரி செய்தியாளரும் அவதூறு பரப்பினர். திமுகவின் குற்றச்சாட்டு உண்மை என்றால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட இடங்களில் கணிசமான அளவில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், எந்த வாக்குச்சாவடியிலும் அப்படி நடக்கவில்லை.

தருமபுரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 8 வாக்குச்சாவடிகளில் கடந்த 18.04.2019 அன்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 6059 வாக்குகளில் 5447 வாக்குகள், அதாவது 89.90% வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 5433, அதாவது 89.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 14 வாக்குகள் மட்டுமே குறைவாக பதிவாகியுள்ளன. விழுக்காடு கணக்கில் பார்த்தால் கால் விழுக்காட்டுக்கும் குறைவாக 0.23% மட்டுமே வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

ஜாலிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள இரு வாக்குச்சாவடிகளில், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் பதிவான அதே அளவில் முறையே 723, 708 வாக்குகள் பதிவாகியுள்ளன. நத்தமேடு பகுதியுள்ள  4 வாக்குச்சாவடிகளில் மூன்றில் கடந்த முறை பதிவானதை விட இம்முறை கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன. 192-ஆவது வாக்குச்சாவடியில் கடந்த முறை பதிவான 694 வாக்குகளை விட 27 வாக்குகள் கூடுதலாக 721 வாக்குகள் பதிவாகியுள்ளன. 194-ஆவது வாக்குச்சாவடியில் கடந்த முறை 807 வாக்குகள் பதிவான நிலையில் இப்போது 821 வாக்குகள் பதிவாகியுள்ளன. 195-ஆவது வாக்குச் சாவடியில் இரு வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. 193-ஆவது வாக்குச்சாவடியில் மட்டும் 16 வாக்குகள் குறைந்துள்ளன. அய்யம்பட்டியிலுள்ள இரு வாக்குச்சாவடிகளில் முறையே 3 வாக்குகளும், 38 வாக்குகளும் குறைந்துள்ளன. இதன்மூலம் கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதும், இப்போது வாக்களித்ததைப் போலவே கடந்த மாதம் நடந்த தேர்தலிலும் மக்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாக்களித்தனர் என்பதும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் எந்தத் தவறும் நடக்காத நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மூலம், தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்று திமுகவினர் செய்த சதி அம்பலமாகியுள்ளது மட்டுமின்றி, தோல்வியும் அடைந்து விட்டது. ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பணியாற்றிய வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள், இவர்களுக்கெல்லாம் மேலாக பொதுமக்கள் ஆகிய 5 தரப்பினரில் எவரேனும் ஒருவர் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களில் ஒருவர் கூட மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. எனினும், தங்களின் தோல்விக்கு காரணம் தேட வேண்டும்; மருத்துவர் அன்புமணி இராமதாசின்  பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களுடன் திமுக மறுவாக்குப்பதிவு நடத்த வைத்தது. ஆனால், அதே அளவில் வாக்களித்ததன் மூலம் திமுக முகத்தில் மக்கள் கரியை பூசியுள்ளனர்.

தேவையின்றி மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மூலம் மக்களின் நேரமும், வரிப்பணமும் வீணாகி  உள்ளது. தேர்தலுக்காக அதிகாரிகள், மத்திய துணை இராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் மனிதசக்தி வீணடிக்கப்பட்டது. மறு தேர்தல் காரணமாக அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஏழைமக்களை வேலைக்கு செல்ல விடாமல், அவர்களின் வயிற்றில் அடித்த பாவத்தை திமுக செய்துள்ளது. இதற்கு காரணமான திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ளவாக்கு பதிவு செய்தல், தேர்தல் முறைகேடுகள் போன்றவை திமுகவினருக்கு கைவந்த கலையாகும். அப்படிப்பட்டவர்கள் தருமபுரி தொகுதியில் பா.ம.க. தவறு செய்ததாக வீண்பழி சுமத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றனர். ஆனால், அவர்களை மக்கள் தோற்கடித்து விட்டனர். அதைப்போலவே தருமபுரி தொகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மண்ணை கவ்வச் செய்வார்கள். தேவையின்றி, மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற  திமுகவும், அதன் தலைமையும் தருமபுரி தொகுதி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss said dmk should ask sorry to dharmapuri people for repoll


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->