கனமழையால் அனைத்தையும் இழந்த விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி.! வெளியான பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக அனைத்தையும் இழந்த விவசாயிகள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

"பல நாட்களாக பட்டினியில் வாடிய ஒருவருக்கு கிடைத்த உணவை வாய்க்கு கொண்டு செல்லும் போது, அந்த உணவு தட்டிப் பறிக்கப்பட்டால், அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ, அதே மனநிலையில் தான் தமிழ்நாட்டு உழவர்கள் இன்று இருக்கிறார்கள். உழவர்களின் குறைகள் உடனடியாக களையப் படா விட்டால் அவர்கள் தங்களின் எதிர்காலத்தையே இழந்துவிடும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சியைச் சந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு விவசாயிகள் வெள்ளத்தை சந்திருக்கிறார்கள். இயற்கை சீற்றங்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார்கள். கடுமையான வறட்சியின் போதும், வெள்ளத்தின் போதும் உழவர்கள் தொடக்க நிலையிலேயே பாதிப்பை எதிர்கொள்வார்கள்; பல தருணங்களில் பயிர் செய்யாமல் தவிர்த்து விடுவார்கள். அதனால், உழவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாகவோ, தாங்கிக் கொள்ள இயன்ற அளவிலோ தான் இருக்கும். ஆனால், இம்முறை தான் உழவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அறுவடையை எதிர்நோக்கியிருந்த நிலையில், எதிர்பாராத தருணத்தில் பெய்த மழையால், முதலீடு செய்த மொத்தத்தையும் இழந்து கடனாளிகளாக மாறியிருக்கிறார்கள்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் தான் ஜூன் மாதம் 12-ஆம் தேதி காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால், குறுவை நெல் சாகுபடி வெற்றிகரமாக அமைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் 15 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அவற்றில் பெருமளவிலான நெற்பயிர்கள் அண்மைக் காலங்களில் 4 கட்டங்களாக பெய்த மழை - அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்து விட்டன.

நெற்பயிர்கள் மட்டுமின்றி கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நிலக்கடலை, சோளம், கரும்பு, உளுந்து, தோட்டக்கலைப் பயிர்கள் போன்றவையும் முழுமையாக அழிந்து விட்டன. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ளது; பிற பயிர்கள் பயிரிடப்பட்டு மழையைத் தாங்கும் பருவத்தை அடைவதற்கு முன்பாகவே அழுகிவிட்டன. அதாவது காவிரி பாசனப் பகுதிகள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்து விட்டனர். அவர்களால் இனி மீட்பதற்கு எதுவும் இல்லை.

தமிழ்நாட்டு உழவர்கள் எவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் செய்வதற்குத் தேவையான இடுபொருட்களை அவர்கள் கடன் பெற்றுத் தான் வாங்குகின்றனர். இப்போதும் அவர்கள் நம்பிக்கையுடன் கடன் வாங்கித் தான் சாகுபடி செய்திருக்கின்றனர். கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிக அதிக அளவில் விளைச்சல் இருக்கும்; அதனால் வருவாயும் அதிகமாக இருக்கும் என்ற விவசாயிகளின் நம்பிக்கையை, ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை பெய்த மழை முற்றிலுமாக சிதைத்து விட்டது. அறுவடைக் காலங்களில் உழவர்களின் கண்களில் இருந்து வழிய வேண்டிய ஆனந்தக் கண்ணீர், அதற்கு முன்பே சோகக் கண்ணீராக வழியத் தொடங்கியுள்ளது. அவர்களின் இழப்பையும், சோகத்தையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது.

காவிரி பாசன மாவட்டங்களில் முதல் இரு கட்டங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.600 கோடி இழப்பீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு பெய்த இரு கட்ட மழைகளில் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை. சேதங்களைக் கணக்கிடுவதில் கூட நெல்லுக்கு காட்டப்படும் முக்கியத்துவம் பிற பயிர்களுக்கு காட்டப்படுவதில்லை என்றும், டெல்டா பகுதிகளுக்கு இணையான முக்கியத்துவம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்றும் உழவர்களிடம் ஒரு வருத்தம் உள்ளது. அந்த வருத்தம் போக்கப்பட வேண்டும். அனைத்து பயிர்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிர் சேதங்கள் மதிப்பிடப்பட்டு முழுமையான இழப்பீட்டை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மிகவும் குறைவு.  அரசு வழங்கும் இழப்பீட்டைக் கொண்டு வாங்கியக் கடனுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியாது என்பது தான் உண்மை. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும். அதற்காக தமிழக அரசுக்கு ஆகும் செலவு, அண்மையில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்காது. அதே நேரத்தில் உணவு படைக்கும் கடவுள்களின் கண்ணீரை இது  துடைக்கும். எனவே, உழவர்கள் வாங்கியுள்ள அனைத்து வகையான பயிர்க் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான செலவில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss request to tn cm for affected farmers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->