இந்த விவகாரத்தில் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு தான் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளின்  உரிமையாளர்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 

நூல் விலை உயர்வும், அதனால் ஏற்படும் விளைவுகளும் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து விடும் என்பதால் இந்த சிக்கலுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.

ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், விசைத்தறி உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில்  தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இத்துறைகளின் மூலம் இந்தியாவுக்கு மிக அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக நூல் விலை சுமார் 40% வரை உயர்ந்திருப்பதால் பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளன. சேலம், நாமக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. 

அதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத் தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நூல்விலை உயர்வு காரணமாக பின்னலாடை நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்திருப்பதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்களும், பருத்திப் பஞ்சும் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தான் நூல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் ஆகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நூல் வெளிநாடுகளுக்கு மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் நூலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இது தான் நூல் விலை அதிகரிக்கக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் பருத்தி அதிக அளவில் விளைவிக்கப்படும் போதிலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும்  நூல் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதில்லை. இதற்கான காரணம் நாடு முழுவதும் இந்திய பருத்திக் கழகம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவது தான். 

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் பருத்தி முழுவதையும் தமிழக அரசே கொள்முதல் செய்து, நூல் தயாரித்தால், அதை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும். அதுமட்டுமின்றி, வெளிச்சந்தையில் போட்டியை ஏற்படுத்தி விலையைக் குறைக்க முடியும். இந்த யோசனை பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வரும் போதிலும் அதை செயல்படுத்த அரசுகள் முன்வரவில்லை.

நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் பின்னலாடை தொழிலும், விசைத்தறிகளும் கடுமையாக பாதிக்கப்படும். பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கும். பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தால் அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் மோசமானதாக இருக்கும். 

இவற்றைக் கருத்தில் கொண்டு நூல் விலையை கட்டுப்படுத்தி, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில்துறைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இடைக்கால நடவடிக்கையாக பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடியை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; 

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தியை தமிழக அரசே கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Need to control the price of yarn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->