பத்தாம் ஆண்டு நினைவுநாள்! குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லையே! உருக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


ஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு, குற்றவாளிகளை தண்டிப்பதே உண்மையான வீரவணக்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் கண்ணியமாக வாழும் உரிமை கோரியதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் பத்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் 17,18 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் மிகக்கொடிய இனப்படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதற்கு காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

இன்றிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அப்பாவித் தமிழர்களை துப்பாக்கி குண்டுகள்,  ஏவுகணைகள் மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் வீசி கொன்றொழிக்கும் சதியில் இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக அனைத்து தமிழர்களையும் அழித்து விட வேண்டும் என்று வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது இராஜபக்சே தலைமையிலான  சிங்கள பேரினவாத அரசு. ‘‘தொப்புள்கொடி உறவுகளான எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று ஈழத்தில் இருந்து தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்கள் வந்து கொண்டிருந்தன. ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று என் போன்ற தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினோம்.

ஆனால், சொந்தங்களைக் காப்பாற்றுவதை விட அதிகாரத்தை அனுபவிப்பது தான் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் உருத்தெரியாத வகையில் சிதைக்கப்பட்டு, யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அழிக்கப்பட்டிருந்தன. பல லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில்   கொத்தடிமைகளை விட மிகவும் மோசமான முறையில், இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட வழியற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட தமிழர்களின்   குடும்பங்களுக்கு நீதியையும், அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசில் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை வழங்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர்.

மாறாக, 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை எண்ணி தளர்ந்து விடாமல், கொல்லப்பட்ட ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலை நடந்த சில நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகளாகி விட்ட போதிலும் அதேநிலை தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பசுமைத் தாயகம்   அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்புகளாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவாலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இராஜபக்சேவை வணங்கி, பரிசுப்பெட்டிகளை வாங்கி வந்ததையும், ஐ.நாவின் பொதுச்செயலாளரை சந்திப்பதாகச் சென்று அதன் வாயில்காப்போனிடம் மனு கொடுத்து வந்ததையும் தவிர துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஈழத்தமிழர் நீதி பெறுவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் விவாதித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, அடுத்த இரு ஆண்டுகளில் நீதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதன்பின்னர்  இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதையும் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளவில்லை; இனி வரும் காலங்களிலும் சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அடுத்தடுத்தக் கட்டங்களைக் கடந்து ‘தி ஹேக்’ நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; ஐநா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்கள், சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா மேற்கொள்ள வேண்டும். அது தான் சிங்கள வெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அவர்களின் பத்தாவது நினைவு நாளில் செலுத்தப்படும் சிறப்பான வீரவணக்கமாக அமையும்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss feel for srilanka tamils


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->