டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட சோகமான தகவல்! அதிர்ச்சியில் விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள்! தமிழகத்தில் திடீரென திவாலான நிறுவனம்! - Seithipunal
Seithipunal


ஆரூரான் சர்க்கரை ஆலைகள் திவால் ஆனதால், உழவர்களுக்கு நிலுவை பெற்றுத் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் 4 சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பு கொடுத்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்காக சொத்துகளை பறிக்க வங்கிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஆலைகளுக்கு கரும்பு வழங்கியதற்காக  நிலுவையில் உள்ள தொகையை எவ்வாறு பெறுவது? எனத் தெரியாமல் உழவர்கள் தவிக்கின்றனர்.

ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு  கடந்த 2016-ஆம் ஆண்டு வழங்கிய ரூ.159 கோடி கடனை சர்க்கரை ஆலை நிர்வாகம் முறையாக செலுத்தவில்லை. ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு வட்டியும் முதலுமாக ரூ.149.36 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், அதை வசூலித்துத் தரும்படி சென்னையிலுள்ள தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தை வங்கிகள் அணுகியுள்ளன. அக்கடனை செலுத்த முடியாத நிலையில் ஆரூரான் சுகர்ஸ் திவால் அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் விவசாயிகள் கடுமையான அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் வங்கிகளிடம் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதது மட்டுமல்ல....  அந்நிறுவனத்திற்கு சொந்தமாக தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர், கடலூர் மாவட்டம் இறையூர், ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125 கோடிக்கும் கூடுதலாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பெயர்களில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.360 கோடியும் கடன் வாங்கி ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் மோசடி செய்துள்ளது.

ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.125 கோடியை எப்படி பெறுவது? தங்களின் பெயர்களில் சர்க்கரை ஆலை வாங்கிக் குவித்த கடன்களை என்ன செய்வது?  உள்ளிட்ட வினாக்களுக்கு விடை தெரியாமல் இரு மாவட்ட உழவர்களும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத நிலையில் உழவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய திவால் சட்டத்தின்படி திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் திவால் தீர்வு வல்லுனர்களால் நடத்தப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் நிறுவனத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு கடன்கள் அடைக்கப்படும். கரும்பு விவசாயிகள் தங்களுக்குரிய நிலுவைத் தொகையை பெற வேண்டுமானால் அது குறித்து தீர்ப்பாயத்திடம் உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சிக்கலான நடைமுறை என்பதால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளால் சாத்தியமாகுமா? எனத் தெரியவில்லை.

ஒருவேளை விண்ணப்பித்தாலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், உழவர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகை கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இது தவிர உழவர்களின் பெயர்களில் ஆரூரான் சுகர்ஸ் வாங்கிய கடன்களை உழவர்கள் தான் அடைக்க வேண்டும் என்று வங்கிகள் கூறினால் உழவர்களால் என்ன செய்ய முடியும்?

தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நிலை என்ன? என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையிலும் கணிசமான அளவுக்கு பாக்கி வைக்கப்படுவதால் கரும்பு விவசாயிகளில் 99 விழுக்காட்டினர் கடனாளிகளாகத் தான் இருக்கின்றனர். அவர்களால், ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பு கொடுத்துள்ளதால் ஏற்படும் பாதக விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை.

எனவே, இவ்விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் திவால் தீர்வு நடைமுறைகள் குறித்த காலத்தில் முடிவடைவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை  முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss about aarooran sugar factory


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->