14 வருடங்களாகியும் எதுவுமே மாறல, இனியாவது மாற்றுங்கள்! வேதனை அளிப்பதாக அன்புமணி ஆதங்கம்!  - Seithipunal
Seithipunal


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் கொண்டுவந்து அமல்படுத்தினார். 

இந்த சட்டத்தை கொண்டு வருவதற்காக நீண்ட நெடிய அரசியல் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் அவர் எதிர்கொண்டார். புகையிலை நிறுவனங்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற நிலையிலும், பொதுமக்களில் நலன் கருதி இந்த சட்டத்தினை அவர் அமல்படுத்தி இருந்தார். 

ஆனால் 14 வருடங்கள் ஆகியும் இந்த சட்டமானது முழுமையாக அமலுக்கு  வரவில்லை என, இன்று காந்தி ஜெயந்தி தினத்தில் தனது ஆதங்கத்தினை அவர் பதிவு செய்திருக்கிறார். தவறே இழைக்காதவர்கள் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார். 

இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு!

புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.  பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது!

இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பொது இடங்களில் புகைப்பதை அனுமதிப்பதால் ஏற்படும் பெருங்கேடு இது!

யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About public place Smoking ban Law


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->