மொத்தமாக ஆப்பு - கர்நாடக அரசின் பயங்கர சதி திட்டம்., எச்சரிக்கை செய்யும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், பாசனம் சார்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தின் சில பிரிவுகள் தடையாக இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

இந்நிலையில், மேகதாது அணைக்கு கொல்லைப்புறமாக அனுமதி பெறுவதற்கான கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் இந்த யோசனைக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் காணொலியில் நடைபெற்ற பல்மாதிரி போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ‘‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகத் தான் உள்ளது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறை அனுமதி ஆகியவற்றை பெறுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. அதனால் திட்டச் செலவுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய அனுமதிகளை பெறுவதை எளிதாக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை செய்தாக வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சரின் நோக்கம் பயனளிக்கக்கூடிய நீர்ப்பாசனத் திட்டங்களையோ, உட்கட்டமைப்பு திட்டங்களையோ விரைவுபடுத்துவது அல்ல. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் பார்ப்பதற்காக மேகதாது அணை கட்டும் திட்டத்தில் ஏதேனும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்; அதைக் கொண்டு அங்குள்ள காவிரி பாசன மாவட்டங்களில் வாக்கு வங்கியை அறுவடை செய்ய வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தத் துடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். கர்நாடக முதலமைச்சரின் இந்த நாடகத்தை நம்பி மத்திய அரசு ஒருபோதும் ஏமாந்து விடக் கூடாது.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின்  ஒருகட்டமாகத் தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுள்ளன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலேயே ஒரு மாநிலத்தில் உருவாகும் ஆறு அந்த மாநிலத்திற்கு மட்டும் சொந்தமாகி விடாது.

மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் மீது, அவை பாயும் அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கடைமடை மாநிலத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் 1956&ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. காவிரி உள்ளிட்ட மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகள் மீதான தமிழகத்தின் உரிமை ஓரளவாவது பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் தான்.

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது; வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் தமிழ்நாட்டை காவிரி ஆற்றின் வடிகாலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் கர்நாடக அரசின் எண்ணம் ஆகும். அதன்படி இப்போது வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உபரி நீரை மட்டுமே  கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் உபரி நீரையும் தடுப்பதற்காக கர்நாடகம் உருவாக்கிய திட்டம் தான் ரூ.9000 கோடியில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டும் திட்டம் ஆகும். மேகதாது அணையை கட்டவிடாமல் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு துணை நிற்பது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தான். தமிழகத்தின் இந்த பாதுகாப்பு அரண்களை தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

அணைகளை பாதுகாக்க வேண்டும் என்ற பொது நல நோக்கத்தை முன்வைத்து 50 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனையின் பின்னணியை ஆராயாமல் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்பு சட்டம் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் தமிழகத்தின் உரிமையை பறித்துள்ளது.  

அதேபோல், காவிரியிலும் தமிழகத்தின் உரிமையை பறிப்பதற்கான கர்நாடகத்தின் சதி தான் இந்த புதிய யோசனை ஆகும். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் கூட, கர்நாடக முதலமைச்சரின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பும், வேதனையும் அளிக்கிறது.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் யோசனையின் பின்னணியில் உள்ள தீய நோக்கங்களை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1956&ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை மத்திய அரசு வலுவிழக்கச் செய்து விடக் கூடாது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Karnataka Plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->