வீட்டையே முறைப்படுத்த வக்கற்றவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பி விட்டார் - எடப்பாடிக்கு எட்டவில்லை போலயே! ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!  - Seithipunal
Seithipunal


கொள்ளிடம் ஆற்றில் வெளியேறும் 20,000 கன அடி நீரை வீணாக கடலில் கலக்க அனுமதித்து விட்டு - 'நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்கிறேன்' என தமிழக முதல்வர் பழனிசாமி சொல்வது வேடிக்கை மிகுந்த வினோதம்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன்' என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டியளித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.

கழக ஆட்சியில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்ட 'காவிரி கால்வாய் தூர்வாரும்' திட்டத்தையும் இந்த அ.தி.மு.க அரசு கைவிட்டு - 'கமிஷன்' அடிப்பதற்காக மட்டுமே தூர்வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி - ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்காங்கே 'கட்டிங்' அடிக்க விட்டுள்ளார்கள்.

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும்

குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் - இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.

முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டுப்படவில்லை.

கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் அக்கம் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி திரு. பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை. "நானும் ஒரு விவசாயி” என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி – மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதலமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார்.

நீர் மேலாண்மையில் அ.தி.மு.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் காட்டும் அலட்சியத்தால் - பொதுப்பணித்துறை இப்போது வருகின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் 'புதுப்பணித்' துறையாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக கிடக்கின்றன என்று செய்திகள் வருகிறது; பிறகு எப்படி பணிகள் நடக்கும்?

பொறியாளர்கள் மாற்றலில் தொடங்கி, பதவி உயர்வு வரை லஞ்ச லாவண்யம் அத்துறையில் தலைவிரித்தாடுவதால் - திறமையான பொறியாளர்கள் இருந்தும் அந்த துறை இன்றைக்கு மேட்டூர் அணையில் நிரம்பும் நீரைக் கூட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கிட முடியாமல் தவிக்கிறது.

குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் 'கமிஷன்' அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் 'நீர் சிக்கனம்' பற்றி எடப்பாடி திரு. பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல - பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள்.

வீட்டையே முறைப்படுத்த வக்கற்றவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பி விட்டார் என்று பொது வெளியில் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது!

கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் - கடலில் கலக்க அனுமதித்து விட்டு, 'உலக சுற்றுலா'வின் ஒரு பகுதியாக "இஸ்ரேல் போகிறேன்" என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது.

ஆதலால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி திரு. பழனிசாமி முன்வந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk leader stalin slams tn cm edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->