ஆறு வருடங்களுக்கு முன் நடந்தது என்ன தெரியுமா? திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த தினகரன்! - Seithipunal
Seithipunal


‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க இப்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது, எந்த உத்தரவாதமும் பெறாமல் திட்டத்தில் இணைவதாக மக்களை வஞ்சிக்கிறது பழனிசாமி அரசு என ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளையும் விமர்சனம் செய்துள்ளார் தினகரன். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது விநியோக முறையின் கீழ் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள் பெற்றுவரும் விலை இல்லா அரிசி உள்ளிட்டவை குறித்த தெளிவான உத்தரவாதம் பெறாமல், 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழகம் இணையும் என்று அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், மத்திய அரசில் அங்கம் வகித்த போது மக்களைப் பாதிக்கும் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க, இப்போது எதிர்ப்பது போல் நாடகமாடுவதும் கண்டிக்கத்தக்கது. 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவின் ஓர் அங்கம் தான்  'ஒரே நாடு,  ஒரே ரேஷன்' திட்டம். இன்றைக்கு இதனை எதிர்ப்பதாக சொல்லும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதைப் போல இத்திட்டத்திற்கு காரணமான உணவு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வாக்களித்து நிறைவேற்றியதையும் வசதியாக மறைத்துவிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க செய்த எத்தனையோ துரோகங்களில் இதுவும் ஒன்று. ஏழை, எளிய மக்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் ‘உரிய திருத்தங்களைச் செய்யாமல் ஏற்க முடியாது’ என்பதில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதியாக இருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதாகவும், மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வோருக்கு சிக்கல் இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப் போவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதனைச் செய்வதற்கு எத்தனையோ மாற்றுவழிகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டம் வந்தால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 20 கிலோ விலையில்லா அரிசி  திட்டத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி இருக்கிற தமிழகத்தின்  அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். 
    
மாநில அரசு தங்களுடைய மாநில மக்களின் தேவைக்கு ஏற்ப பொது விநியோக முறையின் கீழ் திட்டங்களைச் செயல்டுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். கூட்டாட்சி நடக்கிற இந்தியாவில் நேரடியாக மக்களைப் பாதிக்கிற பொது விநியோகம் போன்றவற்றில் மத்திய - மாநில அரசுகள் ஒருமித்த கருத்தோடு இணைந்து செயல்படும்போது மட்டுமே மக்களுக்கு பலன் கிடைக்கும். இதையும் மொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வது சரியாக இருக்காது. 
    
ஏற்கனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டிய சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் தேவையான அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஒரே ரேசன் திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த விரும்பினால் அதற்கு முன்பாக தமிழகத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இலவச அரிசி திட்டத்திற்கு எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பண்டிகை கால அன்பளிப்புகள் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் பிற மாநிலத்தவருக்கு இல்லை என பட்டும் படாமலும் கூறுகிறார்கள். அதைப்பற்றியும்,  ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தில் தமிழக மக்களுக்கு இருக்கிற ஆபத்துகளை நீக்கி, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்தும் பழனிசாமி அரசு விரிவான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK cheating People in one nation one ration scheme said TTV


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->