நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!! அமமுகவினருக்கு தினகரன் வைத்த அவசர வேண்டுகோள்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட வறட்சியை அதிகப்படுத்தும் திட்டங்களுக்குத் தடை விதித்து அந்தந்த கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 
ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும் கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு சட்டப்பூர்வ வலிமை இருக்கிறது. அந்தந்த கிராம ஊராட்சிகளின் நலனுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான அதிகாரம் கிராம சபைகளுக்கு உண்டு. நீதிமன்றங்களைத் தவிர வேறு யாருக்கும் அதில் தலையிடுகிற உரிமை இல்லை. சட்டம் நமக்கு வழங்கி இருக்கிற இந்த ஜனநாயக வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி, மக்கள் விரோத அரசுகள் முன் வைக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், அணுக்கழிவு சேகரிப்பு மையம் உட்பட மக்களுக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை எளிதாக தடுத்து நிறுத்தி நம்முடைய வாழ்வையும், எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றிட முடியும்.

ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் வறட்சி இன்னும் அதிகமாகிவிடும். விளை நிலங்களை அழித்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் புதிது, புதிதான அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான மக்கள் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி கிராம சபை என்னும் ஜனநாயக வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்துவோம். 

எந்தெந்த கிராம எல்லைக்குள் என்னென்ன  மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன என்பதை உடனடியாக அறிந்து, அவற்றின் பெயர் குறிப்பிட்டு அவற்றை தடை செய்யும் தீர்மானங்களை நாளைய கிராம சபை கூட்டங்களில் கொண்டு வாருங்கள். இதோடு நீர்நிலை பராமரிப்பு உள்ளிட்டவற்றை கிராம மக்களே கையில் எடுப்பதற்கான தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

ஊராட்சியின் மொத்த வாக்காளர்களில் 10%க்கும் அதிகமானோர் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று இத்தீர்மானங்களை நிறைவேற்றினால்தான் அவை சட்டப்படி செல்லும். ஒவ்வொரு கிராமத்திலும் இதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுதற்கு ஏதோ ஒரு வகையில் தடையாக இருப்பார்கள். ‘இந்தத் தீர்மானம் அவர்களுக்கும், அவர்களது சந்ததியருக்கும் சேர்த்துதான்’ என்பதை விளக்கிச் சொல்லி அதனை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டு நிற்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள கழக உடன்பிறப்புகள் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேறுவதற்கு கிராம மக்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும் என டிடிவி தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran tell about hydrocarbon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->