தமிழ்நாடு அரசின் இரட்டை வேடம்! - வெளியான கண்டன அறிக்கை!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. மத்திய அரசின் நடவடிக்கைகளை, மாநில மக்கள் நலன் கருதி துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்ற முறையில் இரட்டை வேடம் போடுவது ஏன் என கேள்வி எழுகின்றது.

உதாரணமாக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு கோரி பேரவை நிறைவேற்றிய இரு மசோதாக்கள் குறித்து, முதலமைச்சரும் இன்ன பிற அமைச்சர் பெருமக்களும், பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம், விலக்கு கிடைக்குமென உறுதியாக தெரிவித்தார்கள். ஆனால் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே, பேரவை மசோதாக்களை நிராகரித்து விட்டோம் என கூறுகின்றது.

இதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன.
அண்மையில் விழுப்புரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட தியாகியுமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது.

இது குறித்து எதிர்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் போராட்டத்தை கொச்சைபடுத்தி பேசியதுடன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்திட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றது.
விஞ்ஞானி கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள  கல்வி கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு இந்நாள் வரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றது.

திரைப்பட கலைஞர் சூர்யா கல்வி கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் எனபதற்காக, அமைச்சர் பெருமக்களும், பா.ஜ.க. தலைவர்களும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சூர்யாவை அர்ச்சனை செய்கின்றனர். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஆதரிக்கின்றதா? எதிர்க்கின்றதா? என்பது வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு உரிமைகள் நலன்கள் அனைத்தும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில் மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI Condmns Tamilnadu Govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->