நேரு கொடுத்த உறுதிமொழி! மத்திய அரசின் மொழிவெறி! கண்டனம் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட்! - Seithipunal
Seithipunal


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய அரசின் உள்துறை அமைச்சருமான திரு அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்ற முறையில் இந்தி மொழியை எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும், பேச வேண்டும் என அவரது சுட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். 

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி மொழியை பிற மாநிலங்களில் திணித்து விடும்  முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உள்துறை அமைச்சர் நாட்டை இந்தி மொழி மூலம்  தான் ஒருமைப்படுத்த முடியும் என்ற விஷம விதையினை விதைத்து வருகிறார்.

ஒரே ஒரு தேர்தல், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு, ஒரு மொழி என ஒற்றைக் கட்டமைக்க கலாச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சக்திகள் முயற்சிக்கின்றன. அதே போல் ஆட்சி முறையில்  ஒரு நபர் சார்ந்த சர்வாதிகார ஆட்சி  நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அச்சாணி என்பதை நிராகரித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே உள்துறை அமைச்சரின் சுட்டுரை செய்தியும் அமைந்திருக்கிறது. தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நோக்கத்தோடு, இந்தி மொழி திணிக்கபட்ட போது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழ்நாட்டு மக்கள் விரும்பி ஏற்கும் வரை ‘இந்தி ‘கட்டாயம் இல்லை’ என அளித்த உறுதி மொழி காப்பாற்றப்பட வேண்டும். தொன்மைப் பழமை வாய்ந்ததும், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் இணைந்து வளர்ந்து வருவதுமான ‘தமிழ்’ மொழியை அழித்து விடும் முயற்சியில் ஆர் எஸ் எஸ் + பாஜக மத்திய அரசும் சமஸ்கிருதவாதிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மொழி பேசும் அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசின் மொழிவெறிக் கொள்கை முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது" என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI condemns to amit shah tweet about hindi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->