''தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்''; பனையூர் பாபுக்கு சிந்தனைசெல்வன் கோரிக்கை..!
Chintanaiselvan requests a reconsideration of Panaiyur Babus decision
''மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும், வியத்தகு பாதையில் நம்மால் பின்தொடர இயலா வண்ணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் தலைவரின் கரங்களை இறுக பற்றிக்கொள்வதே சரியென எனக்கு படுகிறது.
நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர்'' என பனையூர் பாபுவின் முடிவை பரிசீலை செய்ய சொல்லி விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''பனையூர் பாபு, தோழமையில் கண்ணியமும் உறுதியும் மிக்கவர் தாங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் செய்யூர் தொகுதிக்கும் தாங்கள் ஆற்றிய நற்பணிகளை நாடறியும். நமது தலைவரும் கடந்த தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அதை மனதார பதிவு செய்து பாராட்டினார் என்பதை தாங்களும் அறிவீர்.
அண்மைகால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும் ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல. ஆயிரமாண்டுகால சமத்துவ கனவுக்காக தன் வாழ்வை தன் இளமையை ஒப்படைத்துக்கொண்டவர் அவர்.
குழந்தையின் கையைப்பிடித்து முன்னால் வழிகாட்டிச்செல்லும் ஒரு தாய் சில நேரங்களில் அத்துமீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றி இருக்கிறார்.
உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் கைவிடவா போகிறோம் நாம்? நிகழ்ந்து முடிந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல. இளையத்தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெரு விருப்பம் காட்டாற்று வெள்ளமாய் ஜென்சி அலையென வெடித்திருக்கிறது.

எம்ஜியார் சிவாஜி போன்ற நாயக பிம்பங்களை மட்டுமே கதாநாயகர்களாக முன்னிருத்தி வந்த தமிழ் சினிமாவில், நாற்பதாண்டுகளுக்கு முன் கால் தாங்கி நடக்கும் சப்பாணி ஒருவரை கதாநாயகனாக பதினாறு வயதினிலே படம் முன்னிருத்தி வெற்றி பெற்ற தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன். அதற்குப்பின் தமிழ்ச்சினிமாவின் தடமே மாறிப்போய் விட்டது.
அந்த திரைப்படம் வெற்றிபெற்றது முந்தைய கதாநாயகர்கள் மீதிருந்த வெறுப்பில் அல்ல. மரபான வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்ற வேண்டுமென்ற இளைய தலைமுறையின் தாகத்தால். தமிழகத்தில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் அரசியல் மாற்றங்கள் வியத்தகு கோணத்தில் அரங்கேற உள்ளதை அவதானிக்க முடிகிறது.
மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும், வியத்தகு பாதையில் நம்மால் பின்தொடர இயலா வண்ணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் தலைவரின் கரங்களை இறுக பற்றிக்கொள்வதே சரியென எனக்கு படுகிறது. அன்புள்ள பாபு.
நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர். எனக்கு உடன்பாடில்லையெனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீரடித்து நீர் விலகுமா என்ன'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Chintanaiselvan requests a reconsideration of Panaiyur Babus decision