அவரு மோடியை சந்தித்து விட்டார்: எடப்பாடியாரே நீங்களும் போங்க முதல்வரை உசுப்பி விடும் அன்புமணி! - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு அனைத்து அனுமதிகளும் அளிக்க வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா  கோரிக்கை விடுத்திருக்கிறார். இரு மாநில உறவுகளை சிதைக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தில்லிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மட்டுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரையும் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும், பிற அனுமதிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். எடியூரப்பாவின் இந்த கோரிக்கை தமிழக உழவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தின் எந்த பகுதியிலும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசால் முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன. கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்பதுதான் மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும். மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, எனக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருக்கிறார்.

இந்த உண்மை கர்நாடக அரசுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் கூட, உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக கர்நாடக ஆட்சியாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதையும், பிரதமரை சந்தித்து மனு அளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அனைத்தும் சட்டத்தின்படியும், நீதிமன்ற ஆணைகளின்படியும் நடந்தால், கர்நாடகத்தின் இந்த செயலைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், பல்வேறு விஷயங்களில், குறிப்பாக  காவிரி விவகாரத்தில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அது கர்நாடகத்துக்கு ஆதரவாகத்  செயல்படுகின்றன என்பதால் தான், எடியூரப்பாவின் இச்செயலைக் கண்டு நாம் கவலைப்பட வேண்டியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் எந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று  ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்துடன் அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது. அதேபோல், மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியையும், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, கர்நாடகத்துக்கு மத்திய அரசு அளித்து விட்டால், தமிழக விவசாயிகளில் நிலைமை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அப்படியெல்லாம் நடந்து விடாது என்று உத்தரவாதம் பெற முடியாத நிலை நிலவுவது தான் நமது கவலைக்கும், அச்சத்துக்கும் காரணமாகும்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி எனக்கு உத்தரவாதம் அளித்தது போன்று, இப்போதுள்ள நீர்வள அமைச்சர் அல்லது பிரதமரிடமிருந்து உத்தரவாதம் கிடைத்தால் மட்டும் தான் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனவே,  அத்தகைய உத்தரவாதத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டும்; அத்துடன் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இதை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வலியுறுத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani ramdoss emphasis to tn cm for meet modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->