எம்பி-யாக பதவியேற்றவுடன் அன்புமணி செய்த முதல் காரியம்! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேற்று காலை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 15 நிமிடங்களுக்கு மேல் இயல்பாக நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முதலில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவரது பணி சிறக்க விருப்பம் தெரிவித்தார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு முத்து விழா கொண்டாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஒருவர் அவரது வாழ்க்கையில் 1000 பிறைகளை காண்பது பெரும் பேறு என்றும் குறிப்பிட்டார். தலைநகர் தில்லிக்கு வரும்படி மருத்துவர் அய்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்ற பிரதமர் ‘‘ முதல் முறை பிரதமரான ஐந்தாண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் நான் அதிக கவனம் செலுத்தினேன். இப்போது பிரதமராகியுள்ள நிலையில், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் பாசனத் திட்டங்கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன்’’ என்று உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.நைஜீரியாவின் நைஜர் படுகையில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அங்கு வேளாண்மை முற்றிலுமாக அழிந்து போனதையும், அதனால், அங்கு விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் அகதிகள் ஆனதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அதேபோன்ற நிலைமை காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்படாமல் தடுக்கும்படி கோரினார். அதைக் கேட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட துறையினருடன் இதுபற்றி பேசுவதாக உறுதியளித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உதவும்படியும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். ‘‘ 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் மனநிலை ஆகும். இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை’’ என்று கூறினார். இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்தாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani meet with modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->