கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளிகள் - சிபிஐ விசாரணை கோரும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி, 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரின் அந்த அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள், முப்பது எண்ணிக்கையிலான 20 லிட்டர் வாட்டர் கேன்கள் மூலம் சாதிக்அலி என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து குற்றவாளிகளைக் கைது செய்தனர் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன. 

இதில், சம்பந்தப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி, 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் தினமும் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால், புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருட்களின் மதிப்பு ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டுமோ என்ற சந்தேகம் எழுகிறது. மாநிலத்தின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தலை மாவட்ட, மாநில நிர்வாகிகள் துணையில்லாமல் சாதாரண திமுக கவுன்சிலர்கள் மட்டும் எப்படி மேற்கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விடியா அரசின் சாதனையால் தமிழகம்,

விலை குறைவான கஞ்சா போன்ற போதைப் பொருளிலிருந்து, தற்போது சர்வதேச மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளுக்கு மாறியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள், குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கை சீரழிந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதுதான் விடியா திமுக அரசின் 18 மாத கால சாதனையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

நான், ஏற்கெனவே கடந்த மே மாதம், தமிழக சட்டமன்றத்தில், 'தமிழகம் போதைப் பொருட்கள் விற்பனைக் கூடாரமாக மாறி வருகிறது என்றும், அரசு அளித்த அறிக்கைகளில் உள்ளவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை என்று சுமார் 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சொற்பமாக வெறும் 148 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது விந்தையாக உள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள்' என்றும் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆளும் கட்சியினரின் தலையீட்டின் காரணமாக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்று பல அறிக்கைகளிலும் கூறியிருந்தேன்.

தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று விடியா அரசின் முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், மாநில D.G.P. கஞ்சாவை ஒழிப்பதற்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 என்று மாநிலம் முழுவதும் சோதனைகள் நடத்தப்படுகிறது. திடீரென்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 24 மணி நேரத்தில் தமிழகமெங்கும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பிடிபடுகிறது; பல நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று ஊடகங்கள் மூலம் அரசு அறிக்கை அளிக்கிறது. பிறகு மீண்டும் மூன்று நான்கு மாதங்கள் கழித்து சோதனை, கைது, அறிக்கை என்ற நாடகம் தொடர்கதையாக உள்ளது.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் கோகைன் போன்ற போதைப் பொருட்களை வைத்திருப்பதே கடுங்குற்றமாகும். பல நாடுகள் இக்குற்றத்திற்கு மரண தண்டனைகூட விதிக்கின்றன. இந்தியாவின் வரலாற்றிலேயே, தமிழகத்தில் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதைப் பொருள் பிடிபட்டிருப்பது இதுதான் முதல்முறை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு தமிழகத்தில் நடந்தேறியுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் சர்வதேச போதைப் பொருள் சந்தையாக மாறி வருகிறதோ என்ற அச்சமும் எழுகிறது. இந்நிகழ்வு நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.

இந்த கடத்தல் நிகழ்வில் ஆளும் கட்சியினரின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் தொடர்பில்லாமல் திமுக கவுன்சிலர்கள் மட்டும் இடம் பெற்றிருப்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. ஏனெனில், சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பு இல்லாமல் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதைப் பொருள் பல சோதனைகளை மீறி ராமநாதபுரம் வரை வந்திருப்பது என்பது இயலாத ஒன்றாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் துணை இல்லாமல் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை என்று செய்திகள் கூறுகின்றன. 

எனவே, பிடிபட்ட 360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் என்ற போதைப் பொருளின் ஆரம்பத்தையும், முடிவையும் கண்டறிய, உடனடியாக இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை வசம் ஒப்படைத்து, தொடர்புடைய அனைவருக்கும் கடுந்தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று இந்த விடியா அரசின் காவல் துறையை வைத்திருக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். 

இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க திமுக அரசு தவறினால், மத்திய அரசே தலையிட்டு, விசாரணையை தன்வசம் எடுத்துக்கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக மக்கள் நலன் வேண்டி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி K. பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say about Ramanadhapuram DMK Member arrested case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->