"வறுமையில் வாழ்ந்தாலும், வசதியாய் வளர்த்தவர் அப்பா.." உலக தந்தையர் தினத்தில், சோக கவிதை..!  - Seithipunal
Seithipunal


அப்பா..! 
அவர்
இறந்தபோது எனக்கு அழுகை வரவில்லை. 

ஆனால் அவரை நினைவுபடுத்தும்
சம்பவம் வரும்போதெல்லாம்
குலுங்கி குலுங்கி 
பலமுறை அழுதிருக்கிறேன்...
இன்றைக்கும் கூட...

அவர் 
எனக்கு நல்ல நண்பர்...
அரசியல்
வரலாறு
தத்துவம்
எல்லாம் பேசுவார் என்னுடன்...

திராவிட சிந்தனையும்
இடதுசாரி சிந்தனையும் அடிக்கடி மோதிக் கொள்ளும்...
விவாதம்
சண்டைவரை செல்லும்...
"அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!" என்று அம்மா வந்து அப்பாவை அதட்டி
முடித்து வைப்பார்...

அவர் எனக்கு செய்யாதது எதுவுமில்லை...

அவர் எனக்கு ஆசான்...
தான் செய்த தவறுகளைச் சொல்லி
இதையெல்லாம் வாழ்நாளில் ஒருபோதும் செயதுவிடாதே...
என்ற 
போதிமரம் அவர்...

பிரியாணி அவருக்குப் பிடிக்கும்...
ஒருமுறை 
ஒரேஒரு பொட்டலம் வாங்கி தந்தேன்...
ஒருவார காலம்...
பத்துக்கும் மேற்பட்ட 
அவர் வயதொத்தவர் பலரும் 
"பிரியாணி வாங்கி தந்தாயாமே... சொன்னாரு..."
என்றனர்.

என்னை 
கண்டித்து பேசியதில்லை...
கடிந்து கொண்டதில்லை...
அறிவுரை சொன்னதில்லை...
அனுபவங்களை நிகழ்வுகளை
கதையைப்போல் சொல்வார்...
அதில் அத்தனையும் 
இருக்கும்...

அவர் சொன்னதை
விரும்பியதைத்தான்
நான் வாழ்கிறேன்.,.

சிலமுறை அவரை அதட்டி இருக்கிறேன்
அப்போது எல்லாம் பரிதாபமாக என்னைப் பார்ப்பார்...
அந்த முகம் 
என் கண்முன் தெரிகிறது இன்றும்...

அவர் எனக்கு
ரோல் மாடல்!

இப்போதும் 
அடிபட்டால்
"அப்பா"
என்று கத்துகிறவன் நான்...

தந்தையை இழந்தவன் ஒருகை இழக்கிறான்...
தாயை 
இழந்தவன் 
மறு கை இழக்கிறான்...
மனையாள் இழந்தவன்
மொத்தமும் இழக்கிறான்..

நான் ஒருகை இழந்தவன்....

நோய்வாய்ப்பட்டுஇறப்பதற்கு 
சில நாட்கள் முன் 
எனக்கு மகள் பிறந்தாள்...
அவரிடம் காட்டினேன்...
நோயின் வேதனையிலும்
புன்முறுவல் செய்தார்...
அவரின்
கடைசி சிரிப்பு...

என்னை வளர்க்க அவர் பட்ட 
துன்பம் ஏராளம்...
வறுமையை அவர் வைத்துக் கொண்டு வசதியை எனக்கு தந்தவர்...
ஒரு தந்தை
பல அவமானம் சந்தித்து தான் குடும்பத்தை மானத்தோடு வைத்திருக்கிறான்!

எனக்கு 
எல்லாமே 
எங்க நைனா தான்...!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fathers day special poetry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->