"கால்வாய் தண்ணீர் வழியிலேயே ஆவியாகிடுச்சு!" டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் விளக்கமும், எகிறும் விமர்சனங்களும்!
Water Evaporated on the Way Delhi CM Rekha Gupta Faces Backlash Over Water Scarcity Remarks
தேசிய தலைநகரான டெல்லியில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் சூழலில், அங்கு நிலவி வரும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அளித்துள்ள விசித்திரமான விளக்கம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
வைரலாகும் விசித்திர விளக்கம்
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசினார். அப்போது டெல்லியின் தண்ணீர் பற்றாக்குறை குறித்துப் பேசிய அவர், “டெல்லிக்குக் கால்வாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், தற்போதைய கடுமையான வெப்ப அலை (Heatwave) காரணமாக வரும் வழியிலேயே ஆவியாகி (Evaporate) விடுகிறது. இதனால்தான் நகருக்குள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என்று ஒரு புதிய அறிவியல் தத்துவத்தைக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அவரை வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் நையாண்டிப் போஸ்ட்கள்
முதலமைச்சரின் இந்த பேச்சைக் கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி (AAP), தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் டெல்லியின் சில பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் சாலைத் தண்ணீரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதோடு, “மேடம், தயவுசெய்து இந்தச் சாலைத் தண்ணீரையும் அப்படியே உங்களது ஆற்றலால் ஆவியாகச் செய்துவிடுங்கள்” என்று மிகக் காரசாரமாகக் கிண்டலடித்துப் பதிவிட்டுள்ளது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “முட்டாள்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
முந்தைய சர்ச்சை: முதலமைச்சர் ரேகா குப்தா இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் டெல்லியின் காற்றுமாசு (Air Pollution) விவகாரத்தில் அவர் தெரிவித்திருந்த சில விசித்திரமான கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகி விவாதத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தண்ணீர் விவகாரமும் டெல்லி அரசியலில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
English Summary
Water Evaporated on the Way Delhi CM Rekha Gupta Faces Backlash Over Water Scarcity Remarks