டில்லி கார் குண்டுவெடிப்புக்கு சக்திவாய்ந்த புதிய வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது: தடயவியல் சோதனையில் அதிர்ச்சி தகவல்..!
Shocking information in forensic tests that powerful new explosive was used in Delhi car blast
தலைநகர் டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளமை நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பில் என்.ஐ.ஏ. விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. இதில் பயங்கரவாதிகள் பற்றிய பின்னணி விவரங்கள், அவர்கள் பயன்படுத்திய தகவல் தொடர்புகள், அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் உதவி செய்தவர்கள் யார் என விசாரணை விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்த டில்லி குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன், இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில், வெடித்த போது மிக அருகில் இருந்தவர்களின் ஆடைகள், அவர்கள் அருகில் இருந்த சில பொருட்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவற்றில் வழக்கமான பயங்கரவாத குண்டுவெடிப்பின் போது, பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும், பலியானவர்களின் உடல்கள் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டன. பலியானவர்களில் பெரும்பான்மையானவர்களின் காதுகளில் உள்ள செவிப்பறைகள் கிழிந்துள்ளதோடு, நுரையீரல் வெடித்துச் சிதறியும் இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பலியானவர்கள், குண்டுவெடித்த போது மிக அருகில் இருந்தததால் அவர்களின் வயிற்று பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள், வெடிப்பு நிகழ்ந்த மையப்புள்ளியின் மிக அருகில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பலியானவர்களின் உடல்களை பல விதமாக ஆய்வு செய்ததில், அதிக சக்தியுடன் குண்டு வெடித்ததால் அவர்கள் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள சுவர்கள் மீது மோதி பின்னர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களில் பல இடங்களில் எலும்பு முறிவுகள், தலையில் ஏற்பட்ட ஆழ்ந்த காயங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வழக்கமாக குண்டு வெடிப்பின் போது, கிடைக்கப்பெறும் பொருட்களின் வேதிப்பொருட்கள் அல்லது துகள்கள் தென்படவில்லை என்றும், முதல் கட்ட ஆய்வுகளில் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வேதிப்பொருட்களுக்கு பதிலாக புதிய அல்லது முன்பை விட மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. அதே நேரத்தில், வெடிபொருள் தயாரிப்பின் போது அந்த அம்மோனியம் நைட்ரேட் வேறு ஒரு பொருளுடன் சேர்த்து கலக்கப்பட்டுள்ளது. அந்த வேதிபொருள் என்ன என்பது உறுதியாக அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
English Summary
Shocking information in forensic tests that powerful new explosive was used in Delhi car blast