அதிகாரிகள் பரிந்துரைத்தனர்., ப. சிதம்பரம்  ஒப்புதல் அளித்தார்., சிதம்பரத்துக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில், முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை, கடந்த மாதம் கைது செய்தது சிபிஐ. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் அவரை பல காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நேரில் சந்தித்து வருகிறார்கள்.  

அதன்படி நேற்று திகார் சிறைக்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசினார்கள். ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எப்போதும் துணையிருக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்ததாகக் தெரிகிறது.

இதை தொடர்ந்து, சோனியா காந்தி தன்னை சந்தித்துச் சென்றது பற்றி தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த ப.சிதம்பரம், ``சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் என்னை வந்து சந்தித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சி வலுவாகவும் தைரியமாகவும் இருக்கும் வரை நானும் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிதம்பரம் சிறையில் இருப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங். அதில் அவர், ``எங்கள் சக நண்பர் ப.சிதம்பரம் நீண்ட நாள்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை  நினைத்து மிகவும் வருந்துகிறேன். இந்த வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

நமது அரசாங்க விதிகளின்படி, ஒரு தனி நபரால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. பல அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ளவர்கள் இணைந்து ஆலோசித்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும். சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், பல அதிகாரிகள், அரசின் 6 செயலர்கள் இணைந்து பரிந்துரைத்த முடிவுக்குத்தான் அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அந்த அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் அவர்களின் பரிந்துரைக்கு வெறும் ஒப்புதல் அளித்த அமைச்சர் மீது மட்டும் எவ்வாறு குற்றம் சுமத்த முடியும். இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஒரு பரிந்துரையை அங்கீகரிப்பதற்கு அமைச்சர் பொறுப்பேற்றால் அரசாங்க கட்டமைப்பு சரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார். இவரின் கருத்து தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P.Chidambaram Case Ex Prime Minister Support


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->