பெற்றோர்களே உஷார்...! கேரளாவை உலுக்கும் புதிய அச்சுறுத்தல்...! - 'ஷிகெல்லா' நோய்க்கு பலியான 4 வயது சிறுமி....! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா தொற்று நோய் சுகாதாரத்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ள நிலையில், 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஷிகெல்லா எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்த குடல்தொற்று, அசுத்தமான உணவு, மாசுபட்ட குடிநீர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு மூலம் எளிதில் பரவக்கூடியதாகும். காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உடல் சோர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

கோழிக்கோடு மாவட்டம் தளக்களத்தூர் பகுதியைச் சேர்ந்த நிலா (4) என்ற சிறுமி, கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி மற்றும் உடல்வலி போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இதற்கிடையில், கோழிக்கோடு அருகே உள்ள பன்னீரங்காவு பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் புரமேரி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஆகிய இருவரும் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளிதரன் வெளியிட்ட தகவலில், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் பயிலும் 164 மாணவ, மாணவிகளுக்கு ஷிகெல்லா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பிறகே அவர்கள் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது உறுதியாக தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ள இந்த தொற்று நோய், கேரளத்தில் சுகாதாரத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களும் உணவு மற்றும் குடிநீர் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents beware new threat shaking Kerala 4 year old girl fallen victim Shigella disease


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->