டிரம்ப் பேச்சுக்கு மோடி பதில் சொல்லியே தீர வேண்டும்...! - ராகுல் காந்தி
Modi must respond to Trumps speech Rahul Gandhi
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ''ஆபரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையை கையில் எடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியாவின் முப்படைகள் தாக்கி அறவே அழித்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

இதில், 3 நாட்களுக்கு மேலாக சண்டை நீடித்த நிலையில் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய முயற்சியால்தான் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், வர்த்தகம் மூலமாக நான்தான் சண்டையை நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான்தான் நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.அதில்,"நாங்கள் (அமெரிக்கா) ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையிலேயே 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.இரண்டும் தீவிர அணுசக்தி நாடு.
இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். அது ஒரு புது வடிவிலான போர் போன்றது என்பது உங்களுக்கு தெரியும்.அண்மையில், ஈரானில் நாங்கள் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டது.ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை முன்னும், பின்னுமாக சென்று கொண்டிருந்தது. மிகவும் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வர்த்தகம் மூலம் அதை தடுத்து நிறுத்தினோம்.
நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளாக நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறினோம்" என்று தெரிவித்துள்ளார்.முன்பு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை முதலில் இந்தியா மறுத்தது. அதன் பின்னர் இந்திய ராணுவ அதிகாரி இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் 5 விமானங்கள் என்பதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் 24 வது முறையாக போர் நிறுத்தம் செய்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று இதற்கு பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.டிரம்ப்பின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
அதில் " மோடிஜி, 5 விமானங்கள் பற்றிய உண்மை என்ன? நாட்டிற்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு!" என்று பதிவிட்டுள்ளார்.வரும் ஜூலை 21 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Modi must respond to Trumps speech Rahul Gandhi