இந்தியா டைட்டானியம் உற்பத்தியில் உலக சாதனை! இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய சகாப்தம்!
India sets world record in titanium production A new era in the Indian defense sector
இந்தியா, தற்போது டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் (கலப்பு உலோகங்கள்) உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளது. இதன் மூலம், பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி இந்தியா எடுத்துள்ள முக்கியமான முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. இந்த வளர்ச்சியின் முக்கிய கட்டமாக, லக்னோவிலுள்ள PTC இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு தேவையான டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளில் அதிக வலிமை மற்றும் குறைந்த எடையுடன் வேலை செய்யக்கூடிய உலோகங்கள் மிக அவசியமானவை. இதுவரை இவை போன்ற உற்பத்திக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருந்தது. தற்போது, PTC நிறுவனம் இதனைச் சொந்தமாக உற்பத்தி செய்யத் தொடங்கியிருப்பது, நாட்டின் பாதுகாப்பு துறைக்கு புதிய திசையை வழங்குகிறது.
PTC இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சச்சின் அகர்வால் இதுபற்றி கூறுகையில், “முன்பு எங்களிடம் இந்த தொழில்நுட்பங்கள் இல்லை. இப்போது இந்த உற்பத்தித் திறன்களும், தொழில்நுட்பங்களும் எங்களிடம் இருப்பதால், வேறு எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.
டைட்டானியம் உற்பத்தியில், உலகளவில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள்தான் முக்கிய இடம் பெற்றிருந்தன. தற்போது இந்தியா, இந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா ஆண்டுக்கு சுமார் 1,75,000 டன்கள் டைட்டானியம் உற்பத்தி செய்கிறது. அதேபோல், PTC நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 1,500 டன்கள் உற்பத்தி செய்து வருவதுடன், இது விரைவில் 6,500 டன்களுக்கு அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து PTC நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் தர இயக்குநர் அலோக் அகர்வால் கூறுகையில், “இந்த ஆண்டின் இறுதிக்குள், ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 6,000-6,500 டன்களை எட்டும் என நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.
டைட்டானியம் என்பது எஃகை விட லேசானதும், அதிக வலிமை கொண்டதுமான உலோகமாகும். மேலும் இது அரிப்பு எதிர்ப்பு திறனும், அதிக வெப்பநிலை தாங்கும் திறனும் கொண்டதால், விமானத் தொழில்நுட்பத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பண்புகள் எரிபொருள் செயல்திறன் மற்றும் விமானங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய 2022ம் ஆண்டு முதல், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள், இந்தியாவை தற்சார்பு பாதுகாப்பு உற்பத்திக்கு நெடுநடை எடுக்கச் செய்தன. இதில் PTC இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த முன்னேற்றம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளவில் முக்கிய உற்பத்தியாளர் நாடாக இந்தியாவை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
English Summary
India sets world record in titanium production A new era in the Indian defense sector