இலங்கைக்கு உதவுதற்கு விமானங்கள் செல்ல வான்வெளி அனுமதிக்கு தாமதம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இந்தியா..!
India rejects Pakistans accusations of delay in airspace clearance for aid flights to Sri Lanka
இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் பொய் என்று நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நமது அண்டை தீவு நாடான இலங்கையில் 'டிட்வா' புயல் ஆடிய கோர தாண்டவத்தால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்நாட்டு உருக்குலைந்து போயுள்ளது. குறித்த சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை, 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 400 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில் நம் நாட்டில் இருந்து உணவு, மருந்து, மெத்தை உட்பட, 31.5 டன் அத்தியாவசியப் பொருட்கள் மத்திய அரசால் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன், 9.5 டன் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகுகள், ஹைட்ராலிக் கருவிகள், 04 ஹெலிகாப்டர்களையும் இலங்கை மீட்புப் பணிகளுக்காக இந்தியா அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி தர மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதாவது, 'இலங்கைக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக, நம் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி கோரியிருந்தது. 'இதனை நான்கு மணி நேரத்திலேயே பரிசீலித்த நம் அரசு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஊடகங்கள் வழக்கம் போல பொய் பிரசாரமும், போலி செய்திகளும் பரப்புகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
India rejects Pakistans accusations of delay in airspace clearance for aid flights to Sri Lanka