மத்திய அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.! கைவிட கோரும் டாக்டர்.ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி செய்யப்பட்ட இந்த பரிந்துரை மிகவும் ஆபத்தானதாகும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான நிதி உறவு, நிதிப்பகிர்வு முறையை வரையறை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 15&ஆவது நிதி ஆணையம், சுகாதாரத்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைத்தது. அக்குழு அண்மையில் நிதி ஆணையத்திடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்வி, குடும்பக்கட்டுப்பாடு ஆகிய துறைகள் பொதுப்பட்டியலில் இருக்கும் போது பொதுசுகாதாரமும் பொதுப்பட்டியலில் இருப்பது தான் சரியானதாக இருக்கும் என்று அக்குழு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் மட்டுமின்றி, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் செயலும் ஆகும்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்தியப்பட்டியலில் உள்ள துறைகளில் மத்திய அரசுக்கும், மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசுகளுக்கும் தான் அதிகாரம் உண்டு. பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் முடிவெடுக்க மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டுக்குமே அதிகாரம் உண்டு என்றாலும் கூட, மத்திய அரசின் முடிவே இறுதியானது ஆகும். அந்த வகையில், பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், அந்த துறைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விடும். அதனால், பொது சுகாதாரம், மருத்துவமனை ஆகிய விஷயங்களில் மாநில அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசுடன் கலந்து பேசி தான் முடிவெடுக்க முடியும். மத்திய அரசு அதன் முடிவை திணித்தால் அதை ஏற்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை.

பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் மக்களுக்கு மிகவும் முக்கியமானவை. மாநில அரசுகள் தான் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவை என்பதால் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு, சுகாதார சேவை வழங்க முடியும். ஆனால், மத்திய அரசால் இது சாத்தியமில்லை. நீட் தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுந்துள்ள நிலையில், பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்ல முயல்வது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இது கூட்டாட்சி தத்துவத்தையே தகர்க்கும் செயலாகும்.

பொது சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அரசு மற்றும் தனியார்துறை கூட்டு முயற்சியில் 3000-5000 மருத்துவமனைகளை அமைக்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது அரசின் வளங்களை தனியாருக்கு வாரி வழங்கும் நோக்கம் கொண்டதாகும். நிதி ஆணையத் துணைக்குழுவில் இடம்பெற்ற 5 உறுப்பினர்களில் இருவர் தனியார் மருத்துவமனை அதிபர்கள் எனும் நிலையில் இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது.

1975-ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, வனம், விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, மின்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணமாகும். அவ்வாறு இருக்கும் போது மேலும், மேலும் துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது நியாயமல்ல.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா ஆணையம், நீதிபதி எம்.எம்.பூஞ்சி ஆணையம், தமிழக அரசால் அமைக்கப்பட்ட பி.வி. ராஜமன்னார் குழு, மேற்கு வங்க அரசின் விரிவான மனு, பஞ்சாப்பில் அகாலி தளம் தயாரித்து இயற்றிய அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் ஆகிய அனைத்துமே மாநில அரசுகளுக்கு தான் பெரும்பான்மை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்; பாதுகாப்பு, வெளியுறவு, பணம் அச்சிடுதல், தொலைதொடர்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு மீதமுள்ள துறைகளின் அதிகாரங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகின்றன. உலகின் வல்லரசான அமெரிக்காவில் கூட இந்த அடிப்படையில் தான் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த பரிந்துரைகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது மிகவும் தவறு. எனவே, பொதுசுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற துணைக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய & மாநில அரசுகளின் அதிகாரப்பகிர்வை வரையறுக்க புதிய ஆணையம் அமைப்பதுடன், அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drramadoss says about health department


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->