மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு! தமிழகத்தில் இருந்து முதல் குரலாக எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


நீதிபதிகள் நியமனத்தில், மாநில அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயலக் கூடாது, என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இது பற்றி  யாரும் அதிகம் பேசாத நிலையில் டாக்டர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றைப் போன்று இந்திய நீதித்துறை பணி என்ற புதிய பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தேசிய அளவில் போட்டித்தேர்வுகளை நடத்தி நீதிபதிகளை தேர்வு செய்வதும், அவர்களை இந்தியாவின் எந்த பகுதியிலும் நியமிக்க வகை செய்வதும் தான் மத்திய அரசின் நோக்கமாகும். இதுகுறித்து மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கருத்துகளை கேட்பதற்காக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களுக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் டாக்டர். அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த ஜூன் 19-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்று தேசிய நீதித்துறை பணியாளர் தேர்வாணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை  தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் புதுமையானது அல்ல... புதியதும் அல்ல. ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2009&ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் 2013&ஆம் ஆண்டு நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

மத்திய அரசு அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வரும் ஒற்றைக் கலாச்சாரத்தை நீதித்துறையிலும் திணிக்க விரும்புவதன் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். ஆனால், இது நல்லது அல்ல. இது மறைமுகமாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். இப்போது வரை கீழமை நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றமே போட்டித் தேர்வுகளை நடத்தி மாவட்ட அளவிலான நீதிபதிகளையும், பிற கீழமை நீதிபதிகளையும் தேர்வு செய்கிறது. வேறு பல மாநிலங்களில் மாநில அரசுகளே கீழமை நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இந்த முறை குறைகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசு திணிக்க முயலும் புதிய முறைப்படி தேசிய அளவில் போட்டித் தேர்வுகள் மூலமாக கீழமை நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் தேர்ச்சி தரவரிசை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மாநிலப் பிரிவு வழங்கப்படும். அவர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உயர்நீதிமன்ற பரிந்துரைப்படி பணியமர்த்திக் கொள்ளலாம். இது இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக கடைபிடிக்கப்படும் முறை தான் என்றாலும் கூட, கீழமை நீதிபதிகள் நியமனங்களை இவ்வாறு செய்வதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். தமிழகத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியாத வட இந்தியர்கள் தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டால், நீதி வழங்கும் முறையே சிதைக்கப்பட்டு விடும். இது எனது ஐயம் மட்டுமல்ல. 2013&ஆம் ஆண்டு நடந்த முதல்வர்கள்  மாநாட்டிலும் இதே ஐயம் தெரிவிக்கப்பட்டது. ‘‘ சாட்சிகள் விசாரணைக்கு உள்ளூர் மொழி மற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியம் என்பதால், உள்ளூர் மொழி தெரியாத ஒருவரை நீதிபதியாக நியமித்தால் அது நீதி வழங்கும் திறனை பாதித்து விடும்’’ என்று முதல்வர்கள் மாநாட்டில் கூறப்பட்டது.

ஆந்திரா, மும்பை, தில்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களும் இதே கருத்தைக் கூறி தேசிய அளவிலான நீதிபதிகள் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்வது மிகப்பெரிய அதிகார ஆக்கிரமிப்பு ஆகும். இது மக்களாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்காது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதித்துறையில் உச்சநீதிமன்றம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் பொதுப்பட்டியலில் தான் உள்ளன. கீழமை நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கினாலும் கூட,  நீதிமன்றங்களை நிர்வகிப்பது, கீழமை நீதிபதிகளை நியமிப்பது ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அதிகாரத்தை  மத்திய அரசு பறிக்க முயலக் கூடாது. இதற்கு முன் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் தான் பெரும் சீரழிவை சந்தித்தது. நீதித்துறைக்கும் அதே போன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது" என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

எனவே, தேசிய அளவில் கீழமை நீதிபதிகளை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் என்பதால் இந்தத் திட்டத்தை ஏற்க இயலாது என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Opposed Central govt decision about judges appointment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->