தொடரும் ரத்து மற்றும் தாமதம்: இண்டிகோ விமானச் சேவைகளை 10% குறைக்க உத்தரவிட்டுள்ள டிஜிசிஏ..!
DGCA orders IndiGo to reduce flight services by 10 percentage
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர்.
அதாவது, அவசரத் தேவைக்குக்கூட அவர்கள் உடனே சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாமல் அவஸ்தையை எதிர்கொண்டனர். இன்று வரையும் குறித்த இண்டிகோ விமான பிரச்சினை தொடர்கிறது. இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோ நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. அதன்படி, டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது. அத்துடன், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் அவர்களின் உடைமைகளையும் திருப்பிகே கொடுத்துள்ளது. இந்த சூழலில் படிப்படியாக விமானச் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படியான ஒரு சூழலில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டளையிடப்பட்ட 10% செயல்பாடுகளைக் குறைப்பதற்கு இணங்க, அதன் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, தினசரி சுமார் 2,300 சேவைகளை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதில், 10 சதவிகிதத்தைக் குறைக்க தற்போது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
DGCA orders IndiGo to reduce flight services by 10 percentage