கூட்டணியில் இருந்தும் சவாலுக்கு தயாரான அன்புமணி! எதிரணியில் இருந்தும் அன்புமணி பின்னால் ஒளியும் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. ஏன் என்றால் எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தான் காரணம். 

புதிய மத்திய அரசு நேற்று மாலைதான் பதவியேற்றது. பதவி ஏற்ற வேகத்தில் தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் 8 வழி சாலை திட்டத்தினை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு தடை வாங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது எனது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.

அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், அரூர், மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை (179 ஏ) நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் புதிய சாலை தேவையில்லை என்பதையும் எனது தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறுவார்கள். அதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, சென்னை & சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தேவை இல்லை என்பதை முழு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவோம். மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பா.ம.க. போராடும்; வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார். மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், இறுதிவரை மக்களுடன் நான் போராடுவேன், சட்டப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். 

தமிழக அரசு தரப்பில் விவசாயிகளுக்கு எதிரான, விவசாயிகள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என முன்கூட்டியே அறிவித்த நிலையில் தான் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பிரச்சாரம் செய்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வர தீவிர முயற்சி எடுப்போம் என்று அறிவித்து இருந்தார். அப்போது அதற்கு பதில் பிரச்சாரம் செய்த, திமுக தலைவர் மு க ஸ்டாலின், "8 வழி சாலை திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் நிச்சயமாக கொண்டுவர விடமாட்டோம் எனவும், பாமக அந்த கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் எனவும் தெரிவித்து மக்களிடையே பேசினார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்க, தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்தது. தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

தற்போது 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு மேல்முறையீடு செய்தது குறித்து, மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்த திட்டத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெரிவிக்காமல், "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு போலி சொந்தம் கொண்டாடிய டாக்டர் அன்புமணி, இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை, மாநிலங்கள் அவை-அமைச்சர் பதவிக்காக, கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறாரா அல்லது எதிர்ப்பு காட்ட கூட்டணியிலிருந்து பா.ம.க விலகும் முடிவை எடுக்கப் போகிறாரா?" என பாமகவையும், அன்புமணியையும் வம்புக்கிழுத்துள்ளார். 

போலி சொந்தம் கொண்டாடிய டாக்டர் அன்புமணி என்று ஸ்டாலினின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது உண்மையில் நகைப்புக்குரியதாகவே உள்ளது. ஏனெனில் அந்த வழக்கை அன்புமணி தன் பெயரில் தொடர்ந்து நடத்தியதற்கான ஆதாரங்கள், பல பத்திரிகைகளில், சமூக வலைதளங்களிலும், நீதிமன்ற கோப்புகளிலும் இருக்கும் பொழுது, அதனை போலி சொந்தம் கொண்டாடிய அன்புமணி என்று கூறியது ஆச்சரியமாக இருக்கிறது. 

அன்புமணி அந்த வழக்கினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தான் தொடர்ந்தார். ஆனால் தமிழகத்திலே அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக, 88 சட்டமன்ற உறுப்பினர்களையும், 9 கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வைத்திருந்தும் இந்த திட்டத்திற்கு எதிராக ஒரு கிள்ளுக்கீரையை கூட, திமுக கிள்ளி போடவில்லை என்பதே யதார்த்தமான உண்மை. மாறாக, தேர்தலுக்கு முன்பு வரை "சட்டமன்றத்திலேயே 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் சட்டசபைக்கு வெளியேவும் 8 வழி சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று தான் அறிவித்திருந்தார்." 

ஆக ஸ்டாலினுக்கு அன்புமணியை போலி சொந்தம் கொண்டாடினர் என்று கூறுவதற்கான தகுதி உள்ளதா என்பதனை ஸ்டாலின் தான் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கூடுதல் தகவலாக "உழவர்களை பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கூடாது; செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் திமுக தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சன்  என்பதையும், ஏற்கனவே பாமக சார்பில் சுட்டி காட்டியுள்ளார்கள். திமுக வழக்கறிஞர் ஆஜரான, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் தான் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு தான் ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார், அதில் திமுக கட்சியை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்வார்கள் என சொல்லாமல்,  அதிமுக கூட்டணியை விட்டு பாமக வெளியே வரவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியே வந்தால் மட்டும் உடனே இந்த திட்டத்தை நிறுத்தி மத்திய அரசு நிறுத்தி விடுமா? என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். ஸ்டாலினின் இந்த வலியுறுத்தல் "கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா" என்ற திரைப்பட நகைச்சுவை போன்றுதான் உள்ளது. 

அப்படி கூட்டணியை விட்டு வெளியேறினால், மத்திய அரசு தன்னுடைய திட்டத்தில் பின்வாங்கும் நடைமுறை இருந்தால், ஒருவேளை பாமக வெளியேறினாலும் வெளியேறலாம். தற்போது பாமக வெளியேறினாலும் அதனால் பாஜகவிற்கு எவ்வித பின்னடைவும் இல்லை. ஏனெனில் தற்போது பாமகவில் எம்பி, எம்எல்ஏ என யாரும் இல்லை. மேலும் தற்போது இருக்கும் அரசு தனிப்பெரும்பான்மை பெற்ற அரசாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது, அமைச்சரவையில், பங்குபெற்றுதுடன் இல்லாமல், ஆட்சியே திமுகவின் தயவில் தான் நடைபெற்றது. அப்போது திமுக கூட்டணியை விட்டோ, ஆட்சியை விட்டோ வெளியேறவில்லை என்பது தான் திமுகவின் துயரமான வரலாறு. 

அறிக்கை முழுவதும், பழிவாங்கும் நடவடிக்கை, தமிழகத்திற்கு பச்சை துரோகம் என வரிசையாக ஸ்டாலின் கூறியுள்ளாரே தவிர, இறுதிவரை, இந்த திட்டத்திற்கு எதிராக, தங்கள் கட்சி என்ன செய்யும், எவ்வாறு செயல்படும் என்பதனை கடைசி வரை அவர் தெரிவிக்கவில்லை. தமிழகத்திலே கூட்டணி கட்சிகளுடன் 109 உறுப்பினர்கள், மத்தியிலே கூட்டணி கட்சிகளுடன் 38 உறுப்பினர்கள் பலமான அங்கீகாரத்தை தமிழக மக்கள் அளித்தும், தமிழக மக்களுக்காக ஒரு வலிமையான ஒரு போராட்டத்தினை ஸ்டாலின் முன்னெடுக்க தயங்குவது ஏன் என திமுகவினர் தான் விளக்க வேண்டும். 

ஆட்சியை கைப்பற்றுவதில் எங்களிடம் இவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என கணக்கு போடும் ஸ்டாலின், மக்களுக்கான பிரச்சனையில் இவ்வளவு பலம் உள்ளது, அதனை கொண்டு வலுவான போராட்டம் நடத்துவோம் என அறிவிக்காமல், அன்புமணி பின்னால் ஒளிந்து கொண்டு, அன்புமணி என்ன செய்ய போகிறார் என்ற அவருடைய கேள்வி? எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வியை நம்மை நோக்கி கேட்க வைக்கிறது. 

கூட்டணியில் இருந்தாலும், மத்திய அரசின் முடிவை எதிர்க்க அன்புமணி தயாரான நிலையில், ஸ்டாலின் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமை இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன் என்று தான் புரியவில்லை. ஒருவேளை தங்கள் கட்சி எம்பிக்கள் மீது உள்ள சிபிஐ வழக்குகள் தான் காரணமோ என்னவோ? 

இன்று அவருக்கு முன்பாக பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை. விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், அரசு நிலங்களில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin hide his party behind pmk in 8 way road scheme


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->