தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்! யார்யாருக்கெல்லாம் வாய்ப்பு! அதிமுக, திமுக எடுக்க போகும் முடிவு! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திமுகவின் கனிமொழி, அதிமுகவின்  கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல் (அதிமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா  ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடிகிறது. 

அண்மையில் முடிவுபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதி களின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழக சட்டப்பேரவை யில் தற்போது அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவிற்கு 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். 

திமுக அணியில் உள்ள காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ எச்.வசந்தகுமார் எம்.பி.யாகி இருப்பதால் அந்த தொகுதி காலியாகிறது. அதனால் திமுக அணியின் பலம் 109 ஆக குறையும். 

தற்போதைய நிலையில் அதிமுக, திமுக தலா 3 இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அதிமுகவும், திமுகவும் தலா 3 வேட்பாளர்களை மட்டும் அறிவித்தால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது. 

ஒருவேளை எந்த கட்சியாவது 4-வதாக ஒரு வேட்பாளரை நிறுத்தினால் அங்கே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்போதும் எவ்வித அதிசயமும் நிகழ வாய்ப்பில்லை. இரண்டு தரப்பிலும் போதுமான அளவில் பலம் இருப்பதால் தேர்தல் நடைபெறப்போவதில்லை. 

இப்போது யார் யாருக்கு ராஜ்யசபா பொறுப்பு வரும் யோகம் உள்ளது என்ற பேச்சானது தமிழக அரசியலில் பலமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைக்கும்போது பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என அதிமுக  தெரிவித்துள்ளது. ஆனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது. அதிமுகவுக்கு மட்டும் ஒரு இடம் கிடைத்துள்ளது.

இதனால் பாமகவிற்கு அதிமுக அந்த ஒரு சீட்டை வழங்குமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்டால் தருமபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் கேபி முனுசாமி, தம்பிதுரைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களில் முனுசாமி மத்திய அமைச்சராக கூட இடம்பெற வாய்ப்புள்ளது. 

திமுகவை பொறுத்தவரை மதிமுகவுக்கு ஒரு இடம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் வைகோ இடம்பெறுவார் என தெரிகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கேட்கப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14-ம் தேதியுடன் முடிகிறது. 

அசாமில் காங்கிரஸ் பலம் இல்லாத காரணத்தால் அங்கு அவர் தேர்வு செய்யப்பட முடியாத சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக திமுக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. திமுக சார்பில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அல்லது மகன் உதயநிதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு வந்தால் அவர்கள் குடும்பத்திலேயே மூன்று  உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். 

English Summary

rajyasabha election in tamilnadu


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal