இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் தோல்வி திட்டமிட்டதா? டோனி செய்தது சரியா? வெளியான பரபரப்பு தகவல்கள்? - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இதுவரையில் நடந்த ஆட்டங்களை விட அதிக சுவாரஸ்யம் கொண்ட ஆட்டமாக,  நேற்றைய ஆட்டம் இருந்தது.  இந்த போட்டியில் ஆடிய இந்தியா, இங்கிலாந்து அணிகளை விட, இந்த போட்டியின் முடிவை இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா அணிகள் தான் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இது மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறி விட்டது. 

இன்னும் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும், நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தை பொருத்து வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா திட்டமிட்டு தோல்வி அடைந்ததா? என்ற கேள்வியினை பலரும் வைத்து வருகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இந்திய அணியினை  கடுமையாக சாடி வருகிறார்கள். 

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? என்று பார்த்தால் முதல் காரணமாக இந்திய அணி டாஸ் இழுந்ததை குறிப்பிடலாம். ஏனெனில் கட்டாய வெற்றியை நோக்கி ஆடிய இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் அதற்கு ஏற்றவாறு தான் ஆடுகளத்தை தயார் செய்திருப்பார்கள். இது போட்டியை நடத்தும் நாட்டின் வழக்கம்தான் என்றாலும் கூட, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆடுகளத்தின் தன்மையை முழுமையாக உணர்ந்து அணியை தேர்வு செய்தது. அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கிய சுழல் பந்துவீச்சாளர் மொயின் அலியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக லியாம் பிளங்கெட் அணியில் சேர்த்தது. 

ஆனால் இந்திய அணியோ வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்த விஜய் ஷங்கரை நீக்கிவிட்டு பேட்ஸ்மேனான ரிஷப் பாண்டை உள்ளே இறக்கியது. இந்திய அணி இந்த இடத்திலேயே சறுக்கிவிட்டது. ஏனெனில் நேற்று பிரதான சுழல் பந்து வீச்சாளர்களான சாஹலும், குல்தீப்பும் 160 ரன்களை இங்கிலாந்து அணிக்கு தாரை வார்த்தார்கள்.  ஆனால் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா முழுமையாக 10 ஓவர்களை வீசி 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சு ஈடுபட்ட நிலையில் ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அணியில் இருந்து இருந்தால் இங்கிலாந்து அணியின் ரன்களில் 20 ரன்கள் வரை குறைந்திருக்க வாய்ப்புண்டு. அதேபோல குல்தீப், சாஹல் ஆகிய இருவரின் பந்துவீச்சும் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்துக்கு எதிராக, எடுபடவில்லை என்பது கடந்த வருடம், இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போதே தெரிந்து விட்டது. 

ஏனெனில் அப்போது முதல் போட்டியில் மட்டுமே 6 விக்கெட்டை வீழ்த்திய குல்தீப்பின் பந்துவீச்சில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் அவர்களுக்கு ஓய்வை கொடுத்துவிட்டு இந்த தொடரில் இதுவரை விளையாடாத ரவீந்திர ஜடேஜாவை உள்ளே களமிறக்கியிருக்கலாம்.. 

அவ்வாறு இறக்கியிருந்தால் டெயிலண்டர்களில் குறிப்பிடத்தக்க பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் புவனேஸ்வர் குமார் காயத்தினால் இல்லாத நிலையில், அவருடைய இடத்தை ரவீந்திர ஜடேஜாவை வைத்து சரி செய்திருக்கலாம்.. அவர் இருந்திருந்தால் டெயிலண்டரில் ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற தன்னம்பிக்கை இந்திய பேட்ஸ்மென்களுக்கு இருந்திருக்கும். 

அதேபோல இங்கிலாந்து அணியின் பேட்டிங் போது, முதலில் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருந்த ஆடுகளமானது, மிடில் ஓவர்களில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் இங்கிலாந்து ரன் குவிக்க தடுமாறியதை அனைவரும் பார்க்க முடிந்தது.  ஏனெனில் முதல் 22 ஓவர்களில் 160 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி அடுத்த 28 ஓவர்களில் 177 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். 

ஆனால் இறுதி ஓவர்களில் இந்திய அணியின் பலமாக இருப்பது புவனேஸ்வர் பும்ரா கூட்டணியின் பந்துவீச்சு இருந்து வருகிறது. புவனேஸ்வர் இல்லாதது இந்த ஆட்டத்தில் எதிரொலித்தது. ஏனெனில் 7 ஓவர்கள் பந்து வீசிய முகமது ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்து 25 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்த நிலையில், இறுதி 3 ஓவரில் மட்டும் 44 ரன்களை வாரி வழங்கியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட இதுவும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. 

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் லோகேஷ் ராகுல் தவிர்த்து அனைவரும் சிறப்பாகவே விளையாடினார்கள். இங்கிலாந்து அணியின் பேட்டிங் போதே ஆடுகளம் மெதுவாகியது.  இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ஆடுகளப் மிகவும் மெதுவாக ஸ்லோவாகிவிட்டது. அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணி தன்னுடைய சொந்த மண் என்ற சாதகமான அம்சத்தை பயன்படுத்தி சூழலுக்கேற்றவாறு விதவிதமான பந்துகளை வீசி நெருக்கடி அளித்தார்கள். எவ்வித பந்தையும் அசாத்தியமாக சந்திக்கும் விராட் கோலி ரோஹித் சர்மா என்ற உலகின் மிகச் சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் கூட திணறும் வகையில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அதையும் சமாளித்து இருவரும் அணியை மீட்டது சிறப்பான ஒரு பங்களிப்பாகும். 

அதேபோல அவர்களுக்கு பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஹர்டிக் பாண்டியா இருவரும் பெரிதாக அடித்து ஆடுவது போல நமக்குத் தோன்றவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளுக்கு உரிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றே கூற வேண்டும். அவர்கள் அடித்து ஆட்டமிழந்த ஷாட் மட்டுமே மோசமான ஷாட்டாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது என்பதுதான் கிரிக்கெட்டை முழுமையாக உற்று நோக்கும்  ஒருவரின் கருத்தாக இருக்கும். 

அது போன்றுதான் இந்த தோல்விக்கு மிகவும் அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர் என்றால் இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி தான்.  ஏனெனில் அவர் ஹர்டிக் பாண்டியா அளவிற்கு ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்தாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இறுதிவரை களத்தில் நின்று அவர் அடித்து ஆட முயற்சிக்கவில்லை என்பது தான் பலரின் விமர்சனமாக இருக்கிறது. 

இதற்கு மிக முக்கிய காரணம்  இங்கிலாந்து அணியினர் மிகவும் மெதுவான பந்துவீச்சை அதுவும் சுழற்பந்து வீச்சாளர் போல பந்தை சுழற்றிவிட, பந்தை கணிக்க முடியாத அளவிற்கு மாற்றி மாற்றி வீசியதால், இவரால் ஓரிரு ரன்களாக மட்டுமே எடுக்க முடிந்தது.  

இறுதி நேரத்தில் எட்ட முடியாத இலக்குடன் கேதர் ஜாதவ், தோனி நிலைத்து நின்றிருந்தும், அவர்கள் முயற்சிக்க வில்லை என்பது தான் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படி ஆடியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. துரதிஷ்டவசமாக இந்தியாவின் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணிக்கு ரன்ரேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வாறு நடந்து விட்டால் நல்ல ரன்ரேட் இருக்க வேண்டியது அவசியமாகும். 

அதனால் இறுதிவரை களத்தில் நிற்பதை தோனி கேதர் ஜாதவ் ஜோடி உறுதி செய்தது என்கிறார்கள் மறுபக்கம். இதற்கு முக்கிய காரணம் அடுத்து வரும் நான்கு வீரர்களும் ஒரு குறிப்பிடத்தகுந்த ரன்களை எடுக்க கூடியவர்கள் அல்ல என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 

இந்திய அணி டாஸ் இழந்தது, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு, மோசமான இறுதி ஓவர் பந்துவீச்சு,  பேட்டிங்கில் தொடக்கம் சரியில்லாமல் போனது, சிக்சரே அடிக்க முயற்சிக்காமல் இருந்தது என பல காரணங்கள் தோல்விக்கு உண்டு. ஆனால் இங்கே தோனியை மட்டுமே குறிப்பிட்டு விமர்சனம் வைக்கப்படுவது அவர் மீது உள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பினை காட்டுகிறது. 

மேலும் இந்த போட்டியில் ஜேசன் ராய் முன்கூட்டியே அவுட்டாகி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை DRS சிஸ்டத்தில் முதிர்ச்சி அற்ற ஒரு கேப்டனாக தான் விராட் கோலி இருக்கிறார். தோனி என்ன சொல்கிறாரோ அதனைதான் அவர் செய்துவருகிறார். இந்த போட்டியில் தோனி சொல்வதைக் கேட்காமல் அவர் தன்னம்பிக்கையுடன் அப்பில் செய்திருந்தால், ஜேசன் ராய் முன்கூட்டியே ஆட்டம் இழந்திருக்கக்கூடும். இதனாலும் சில ரன்களை கட்டுப்படுத்தியிருக்கலாம். கேப்டன் கோலியும் இன்னும் தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்த ஒரு ஆடுகளத்தில், 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்த இந்திய அணியின் பேட்டிங் வரிசையை குறை சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  அவர்கள் போராடாமல் இருந்து விட்டார்கள் என்று விமர்சனம் செய்வதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் ஆடுகள தன்மைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் ரன்ரேட்டை கவனத்தில் கொண்டு ஆடியது என்றே கூறலாம். 

ஆனால் இந்தத் தோல்வி திட்டமிட்ட தோல்வி தோனி வேண்டும் என்றே செய்து விட்டார் என்ற விமர்சனங்கள் தான் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்திய அணிக்கு தேவை ரசிகர்களின் உற்சாகமும் ஊக்கமும் தான். அதனை இந்திய ரசிகர்கள் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலகக்கோப்பையுடன் திரும்ப இந்திய அணிக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போவோமே..

Tamil online news 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India lose against England with well planned


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->