ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! மருத்துவர் இராமதாசு அறிக்கை - Seithipunal
Seithipunal


இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், மத்திய மனிதவளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அண்மையில்  தில்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிலைக்குழுவின் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் சமூகநீதித் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியநாராயண் ஜாட்டியா, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே  இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று ஐ.ஐ.டி மற்றும்  ஐ.ஐ.எம்.களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணையிட்டிருக்கிறது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள்தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 49.50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டிகளில் வெறும் 12% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட நுழைவுநிலை பணிகளான உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு சேர்த்து மொத்தமாக 12.40 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள், அதாவது 88% இடங்கள் உயர்சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள்(9.64%), பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள்(2.33%), பழங்குடியினருக்கு 3 இடங்கள் (0.43%) மட்டுமே கிடைத்துள்ளன. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால் அவை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்படுவது தான் கொடுமையாகும். 2018&ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 682 பேரில் 16 பேரும், 2019-ஆம் ஆண்டில்  271 பேரில் 5 பேரும் மட்டும் தான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் என்பதிலிருந்தே ஐ.ஐ.டிகளில் சமூகநீதி எந்த அளவுக்கு படுகொலை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஐ.ஐ.எம்.களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 18 ஐ.ஐ.எம்கள் உள்ளன. அவற்றில் 16 நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டு விவரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 16 ஐ.ஐ.எம்.களில் 90% ஆசிரியர் பணிகள் உயர்சாதியினருக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த 16 ஐ.ஐ.எம்.களிலும் பழங்குடியினர்  ஒருவர் கூட ஆசிரியராக இல்லை. 12 நிறுவனங்களில் பட்டியலின ஆசிரியர்களே இல்லை. 7 நிறுவனங்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஐ.ஐ.எம்.களில் இடஒதுக்கீடு இன்னும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அந்த அளவுக்கு அங்கு சமூகநீதி முளையிலேயே கருக்கப்படுகிறது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 49.50% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு மூல காரணம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-களில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை பிறப்பித்த ஆணை தான். அந்த ஆணையில் தொழில்நுட்ப பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் 40 ஆண்டுகளாக சமூகநீதியை மறுத்து வருகின்றன. ஆனால், இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட  ஆணைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றும், இப்போதுள்ளவாறு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் ஐ.ஐ.டிகளிலும், ஐ.ஐ.எம்.களிலும் இனி சமூகநீதி படுகொலை செய்யப்படாதே தவிர, இதுவரை படுகொலை செய்யப்பட்டது, செய்யப்பட்டது தான். இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம். எனவே, கடந்த காலங்களில் சமூகநீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்காக ஐ.ஐ.டிகள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் எத்தனை பணியிடங்களை பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால் அவர்களுக்கு முறையே 27%, 15%, 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். அவை அனைத்தையும் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை முழுக்க முழுக்க இடஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அது தான் சமூகநீதியை தழைக்கச் செய்ய ஒரே வழியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fill the IIT vacancy with reservation said dr ramadoss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->